குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
ஊர்காவற்துறை பிரதேச சபைக்கு உட்பட்ட மண்குழி எனும் பகுதியில் உள்ள நன்னீர் கிணற்றில் இருந்து கடற்படையினர் நன்னீர் பெறுவதற்கு தடை விதித்து பிரதேச சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டு உள்ளது. ஊர்காவற்துறை பிரதேச சபை அமர்வு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை தவிசாளர் ம.ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது.
அதன் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஞா.லக்ஸ்மன் கடற்படையினர் பொதுமக்களின் பாவனையில் உள்ள நன்னீர் கிணற்றில் கடற்படையினர் நன்னீர் எடுப்பதனை தடை செய்ய வேண்டும் என கோரி பிரேரணையை முன் மொழித்தார்.
குறித்த பிரேரணை சபையில் ஏக மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது. பிரேரணையின் பிரதிகளை ஊர்காவற்துறை பிரதேச செயலாளர், ஊர்காவற்துறை கடற்படை தளபதி , யாழ்.மாவட்ட செயலாளர் , வடமாகாண ஆளுனர் ஆகியோருக்கு அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
குறித்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது. மண் குழி பிரதேசத்தில் காணப்படும் நன்னீர் கிணற்றில் இருந்து கடற்படையினர் தமது தேவைக்காக தினமும் 10 ஆயிரம் லீட்டர் நன்னீரை நீர் தாங்கியில் எடுத்து செல்கின்றனர்.
அதனால் நிலத்தடி நீர் வற்றி, நீர் உவர் தன்மையாக மாற்றம் அடைந்து வருகின்றது. அதனால் மக்கள் பாவனைக்கு நீர் இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டு உள்ளது. அதனால் அப்பகுதி மக்கள் தமது அன்றாட தேவைக்கு நன்னீரை பெற்றுக்கொள்ள பல சிரமரங்களை எதிர்நோக்கு கின்றார்கள். அது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல தடவைகள் தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
எனவே மக்கள் பயன்பாட்டில் உள்ள நன்னீர் கிணற்றில் இருந்து கடற்படையினர் நன்னீரை எடுக்க தடை விதிக்க வேண்டும் என குறித்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.