குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
யாழ்ப்பாணம் அராலி பகுதியில் குடியிருக்கும் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் இனந்தெரியாத மனிதர்களது அச்சுறுத்தல் செயற்பாட்டினை கட்டுப்படுத்தும் வகையில் ஆலோசனை கூட்டமொன்று அப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
யாழ்.அராலி பகுதியில் கடந்த சில வாரங்களாக அப் பகுதி மக்களை குடியிருப்பாளர்களை அச்சுறுத்தும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மக்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக குள்ள மனிதர்கள் போன்று இருப்பதாகவும், பாயும் சப்பாத்துக்களை அணிந்தவாறும், முகம் மற்றும் உடல் முழுவதையும் கறுப்பு உடையினால் மறைத்தவாறு வருபவர்கள் இவ் அச்சுறுத்தல் செயற்பாட்டில் ஈடுபடுவதாக அப் பகுதி மக்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு வருவோர் வீட்டின் கூரைகள் மீது கல்லெறிந்து தாக்குவதாகவும் வீட்டில் இருப்பவர்களது கண்களில் தென்படும் வகையில் பதுங்கி இருந்து விட்டு பின்னர் பாய்ந்து செல்வதாகவும் அப் பிரதேச வாசிகள் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து இச் சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அரச அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் பொலிஸ், இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் அப் பிரதேச மக்கள் ஆகியோருக்கிடையில் இன்றைய தினம் புதன்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது. இச் சந்திப்பின் போது, இங்கு பாதிக்கப்பட்ட அப் பிரதேச மக்கள் பலரும் தாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக குறிப்பிட்டிருந்தனர்.
மேற்படி சம்பவத்தினால் தினம் இரவினை அச்சத்துடனேயே கழிப்பதாகவும், இளைஞர்கள் ஊர்களில் அதிகாலை மூன்று மணிவரை காவல் செய்வதாகவும், இதனால் அவர்களால் மறு நாள் ஒழுங்காக தொழிலுக்கு செல்லவோ அல்லது பாடசாலைக்கு செல்லவோ முடியாத நிலை காணப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தனர். எனவே இப் பிரச்சனைக்கு தீர்வொன்றை வழங்குமாறும் அப் பகுதியில் பொலிஸாரது ரோந்து நடவடிக்கைகளை அதிகப்படுத்துமாறும் அவர்கள் கோரிக்கைவிடுத்தனர்.
இது தொடர்பாக அங்கு கருத்து தெரிவித்த யாழ்.பிராந்திய உதவி காவற்துறை அத்தியட்சகர், இப் பிரச்சனையை கட்டுபடுத்த இப் பகுதி இளைஞர்கள் பத்து பத்து பேர் வீதம் உள்ளடக்கி அவர்களோடு மூன்று காவற்துறை உத்தியோகத்தர்களையும் இணைத்து குழுவொன்றை அமைத்து இரவு நேர ரோந்து நடவடிக்கையை முன்னெடுக்க உடனடியாக அக் குழுவை அமைப்பதாக தெரிவித்தார்.