தெல்லிப்பளை வைத்தியசாலையின் புற்றுநோய்ப்பிரிவு வடமாகாணத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் சேவையாற்றி வருகின்றது. தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையில் தேவையான 18 வைத்தியர்களில் 9 வைத்தியர்கள் மட்டும் கடமையாற்றுகிறார்கள். அங்கு நீண்ட காலம் சேவையில் உள்ளவர்களுக்கும் உரிய காலப்பகுதிக்குள் இடமாற்றம் வழங்கப்படுவதில்லை. இதனால் அங்கு வைத்தியர்கள் பற்றாக்குறை நீண்ட காலமாக நிலவி வருகின்றது. இது மோசமான நிலையாகும். இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கும், அமைச்சுக்கும் அறிவித்தும் இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை.
இருப்பினும் இதுவரை நோயாளர்களுக்கு எந்தவிதமான பாதிப்புக்களும் ஏற்படாதவாறு அங்குள்ள சொற்ப வைத்தியர்களால் சேவை வழங்கப்படுகின்றது. இத்தகைய நிலையில் மத்திய சுகாதார அமைச்சின் செயலாளர் அவர்களின் சுற்றறிக்கை பிரகாரம் 2015ம் ஆண்டு வரையான வைத்தியர்களின் இடமாற்றம் செய்யுமாறு வைத்தியசாலை பணிப்பாளர்கள் மற்றும் மருத்துவ அத்தியட்சகர்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தெல்லிப்பளை புற்றுநோய் வைத்திய சாலைக்கு வர வேண்டிய இடமாற்றத்தில் யாழ்.போதனா வைத்திய சாலை மற்றும் கிளிநொச்சி வைத்திய சாலையில் இருந்து வர வேண்டியவர்களை விடுவிக்க அவ் வைத்திய சாலை பொறுப்பதிகாரிகள் இணங்கியுள்ளனர்.இத்தகைய சூழ்நிலையில் போதனா வைத்தியசாலை அடங்கலாக வட மாகாணத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளும் இடமாற்றம் செய்ய ஒத்துழைப்பு வழங்க பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை மருத்துவ அத்தியட்சகர் வைத்திய கலாநிதி குகதாசன்மட்டும் அங்குள்ள வைத்தியர்களிற்கு பிரதியீடாக வைத்தியர்கள் வழங்கிய பின்னரும் விடுவிக்க மறுப்பு தெரிவிக்கின்றார்.இவர் மீது சாவகச்சேரி வைத்தியசாலையில் இருந்த போதும் பல நிர்வாக குற்றச்சாட்டுகள் இருந்தன.மேலும் அங்கிருந்த போதும் இடமாற்றம் செய்ய வேண்டிய வைத்தியர்களை விடுவிக்க மறுத்து வந்தார்.இது சம்பந்தமாக மாகாண சுகாதார அமைச்சரும் தனது கருத்துக்களையும் அவர் செவிமடுப்பதில்லை எனவும் வட மாகாண அபிவிருத்தி சுகாதார கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை எனவும் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் இறுதியாக எமது தாய் சங்கத்தின் ஊடாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை மருத்துவ அத்தியட்சகர் வைத்திய கலாநிதி குகதாசன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது சேவைகள் ஆணைக்குழுவிற்கும், வட மாகாண சுகாதார பணிப்பாளர் ஊடாக மத்திய சுகாதார அமைச்சுக்கும் அறிவித்துள்ளோம். இதனால் சில நடவடிக்கைகள் நடக்கும் என எதிர்பார்கின்றோம்.
இருப்பினும் அவ் வைத்திய சாலையில் நிலவும் வைத்தியர்கள் பற்றாக்குறையை நிவர்ததி செய்வதற்கு ஒருவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாத பட்சத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தினை நடத்த முடிவு செய்துள்ளோம். இவ் வேலை நிறுத்தப் போராட்டம் யாழ் போதனா வைத்தியசாலை நீங்கலாக யாழ் மாவட்ட சுகாதார சேவைகள் பிராந்தியத்திற்குட்பட்ட அனைத்து வைத்தியசாலைகளிலும் நடைபெறும். எமது கோரிக்கைகளாக 2015ம் ஆண்டுவரையான இடமாற்றத்தை அமுல்படுத்தல் மற்றும் வட மாகாண சுகாதார பணிப்பாளர் அவர்கள் சுகாதார பணிப்பாளர் நாயகம் அவர்களிற்கு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை மருத்துவ அத்தியட்சகர் வைத்திய கலாநிதி குகதாசன் அவர்களிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு எழுதியதிற்கு அமைய பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை மருத்துவ அத்தியட்சகர் வைத்திய கலாநிதி குகதாசன் மீது உடனடியாக விசாரணை ஆரம்பிக்க வேண்டும் என்பனவாகும்.
போராட்டத்திற்கு உரிய பலன் கிடைக்காவிட்டால் மேலதிக நடவடிக்கைளையும் செய்வதற்கு தீர்மானித்துள்ளோம்.
நன்றி
வட மாகாண அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்.