இலங்கையில் புகையிரத பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பைத் தொடர்ந்து, இலங்கை இராணுவத்தின் பேருந்துகள் இன்று (9.8.18) சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு, அவசர சேவையாக இந்தச் சேவை இடம்பெறுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
புகையிரத சேவைப் பணியாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான அமைச்சரவை பத்திரத்திற்கு இவ்வார அமைச்சரவையில் அனுமதி வழங்கப்படவில்லை. இதனையடுத்து நேற்று மாலை முதல் ரயில்வே ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், பணிகளுக்கு சென்றவர்கள் மீண்டும் வீடுகளுக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்ட நிலையில், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் குவிந்திருந்த பயணிகள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். இதனால் முப்படையினரின் பாதுகாப்பின் கீழ் கோட்டை ரயில் நிலையம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பயணிகளின் நன்மை கருதி இராணுவத்தின் பாதுகாப்புடன் தூர இடங்களுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் சில நேற்றிரவு முதல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.