இந்து அறநெறிப்பாடசாலைகளை அதிகளவில் தோற்றுவித்து அறநெறிகளை குழந்தைகளுக்கு போதிக்க வேண்டும். அதன் மூலம் வன்முறை உள்ளிட்ட தவறான பழக்க வழக்கங்களை குறைத்துக் கொள்ளலாம் என வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்தார்.
பௌத்த, கிறிஸ்தவ, முஸ்லீம் மதங்கள் தத்தமது சமய நெறிகளை அறநெறிபாடசாலைகள் ஊடாக சிறுவர்களுக்கு போதித்து வரும் நிலையில் இந்து சமயம் அறநெறிகளை தமது சமயம் சார்ந்தவர்களுக்கு போதிப்பதில் வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்தார்.
வன்முறை மற்றும் சமூக சீரழிவுகளை தடுப்பதற்காக சமூக பிரதிநிதிகளையும், மதத் தலைவர்களையும், அதிகாரிகளையும், சட்டத்துறையை சேர்ந்தவர்களையும் பாதுகாப்புத் தரப்பினையும் ஒன்றினைத்து கட்டமைப்பு ஒன்று உருவாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகவும் அதற்கான முன் ஏற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் ஆளுநர் றெஜினோல்ட் குரே குறிப்பிட்டார்.
யாழ் குடாநாட்டில் அதிகரித்துள்ள வாள்வெட்டுச்சம்பவங்கள் மற்றும் போதைவஸ்து பாவனையினை தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வு செய்யும் விசேட கூட்டம் இன்று (09.08.2018) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இங்கு கருத்து வெளியிடும்போது இதனைத் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் றெஜினோல்ட் குரே ஒழுங்கு செய்திருந்த இக்கூட்டத்தில் பொலிஸ் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள், மதத் தலைவர்கள், சமூக அக்கறையுடைய புத்திஜீவிகள். குடாநாட்டில் உள்ள அனைத்து பிரதேச செயலாளர்கள், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
மூன்று மணி நேரம் நடைபெற்ற கலந்துரையாடலில் அரச உயர் அதிகாரிகளினாலும் சமூக பிரதிநிதிகளினாலும் மதத் தலைவர்களினாலும் பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.
குறிப்பாக தென்மராட்சி கெற்பலி, தனங்களப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பிலும். குடியிருப்பாளர்கள் அற்ற வீடுகளில் இடம்பெறும் கலாச்சார மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பிலும் நாவற்குழி கரையோரத்தினை அண்டிய பகுதியில் கஞ்சா பாவனை அதிகரித்துள்ளமை தொடர்பிலும் ஆளுநருக்கு பிரஸ்தாபிக்கப்பட்டது.
அதேபோன்று காரைநகர், புங்குடுதீவு, அனலைதீவு உள்ளிட்ட பிரதேசங்களில் இறைச்சிக்காக மாடுகள் வெட்டப்படுவது குறித்தும் அதற்கு உடந்தையாக இருப்போர் குறித்து முறைப்பாடு செய்யப்பட்டும் நடவடிக்கைகளில் முன்னேற்றம் இல்லாது காணப்படுவது தொடர்பிலும அதிகாரிகள் ஆளுநருக்கு தெரிவித்தனர்.