யாழ் வைத்தியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது இலங்கையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அனைத்து மக்களும் சரிசமமான அளவில் வினைத்திறனான வைத்திய சேவையை வழங்க ஒவ்வொரு வருடமும் நடைமுறையில் உள்ள வைத்தியர்களின் இடமாற்றத்தினை சுகாதார அமைச்சுடன் இணைந்து அமுல்படுத்தி வருகின்றது.
இவ்வாறு வழங்கப்படும் தரமான சுகாதார சேவைக்கு குந்தகமாகபகிரங்க சேவை ஆணைக்குழுவினால் வழங்கப்படும் இடமாற்றங்களை உரிய முறையில் நடைமுறைப்படுத்தாமல் முட்டுக்கட்டையாக இருந்ததோடு மட்டுமல்லாமல் உயர் அதிகாரிகளின் உத்தரவுகளை உதாசீனம் செய்தமைக்கு எதிராக பருத்தி துறை ஆதார வைத்தியசாலை மருத்துவ அத்தியட்சகருக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகளை துரிதப் படுத்த வேண்டும் எனவும் வடமாகாண சுகாதார அமைச்சரிடமும் சுகாதார அமைச்சின் செயலாளரிடமும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமானது கோரியிருந்தமை யாவரும் அறிந்த ஓர் விடயமாகும்.
வடமாகாண சுகாதார அமைச்சரின் நேரடி தலையீட்டின் மூலம் தெல்லிப்பளை புற்று நோய் வைத்தியசாலைக்கு பருத்தி துறை ஆதார வைத்தியசாலையில் இருந்து 2015 ஆண்டு இடமாற்றம் வழங்கப்பட்டும் நடைமுறைப்படுத்தாமல் கடந்த மூன்று வருடமாக இழுத்தடிக்கப்பட்ட இடமாற்றம் இன்று உடனடியாக அமுலாக்கப் பட்டுள்ளது.
இவ்வாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுக்கும் வைத்தியர்களின் இடமாற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்காமல் சங்கத்திற்கு களங்கம் விளைவிக்கும் நோக்குடன் மக்களை பிழையான வழியில் திசை திருப்பும் அதிகாரிகள் மீது கடும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
2015ம் ஆண்டு போன்று மற்றைய ஆண்டு இடமாற்றம் ஆனது அடுத்தடுத்த மாதங்களில் செயற்படுத்த எல்லோரும் இனணந்து செயற்படவேண்டும் என்று கேட்டு கொள்கின்றோம்.
எமது கோரிக்கைகளில் ஒன்றான பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை மருத்துவ அத்தியட்சகர் மீதான விசாரணை குறுகிய காலத்தில் நடைபெற வேண்டும் எனவும் இல்லை எனில் மீண்டும் நாம் வேலை நிறுத்த போராட்டம் மேற்கொள்ள வேண்டி வரும் என்றும் தெரிவிக்கின்றோம்.
இன்றைய தினம் மட்டும் யாழ் மாவட்டத்தில் 4 வைத்தியர்களின் இடமாற்றங்கள் நடைபெற்றுள்ளன. இதனால் புற்றுநோய் வைத்தியசாலை மட்டுமன்றி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கும் வைத்தியர்கள் இன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இன்று விடுவிக்கப்பட்ட வைத்தியர்கள் நாளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படுவர் என யாழ் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் வைத்திய கலாநிதி நந்தகுமரன் தெரிவித்தார் .
இதனைத் தொடர்ந்து எமது வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகின்றது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை மருத்துவ அத்தியட்சகர் வைத்திய கலாநிதி குகதாசன் அவர்கள் மீதான ஒழுக்காற்று விசாரணை துரிதப்படாதவிடுத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் நாம் மீண்டும் குதிக்க நேரிடும்.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்