Home இலங்கை காவற்துறையினர் கொள்ளையில் ஈடுபடுவதாக ஜவாஹீர் குற்றசாட்டு….

காவற்துறையினர் கொள்ளையில் ஈடுபடுவதாக ஜவாஹீர் குற்றசாட்டு….

by admin


சட்டரீதியான அனுமதிகள் வழங்கப்பட்டு, சீருடைகள் வழங்கப்பட்டு வீதியில் நிற்கும் சில பொலிஸார், கொள்ளையர்கள் போன்று செயற்படுவதனையும் , லஞ்சம் பெறுவதனையும் நிறுத்தும் வரை வடமாகாணத்தில் வீதி விபத்துக்களையும், அதனால் உண்டாகும் பாரிய உயிர் சேதங்களையும் ஒருபோதும் தடுக்க இயலாது. என வடமாகாணசபை உறுப்பினர் ஜவாஹிர் தெரிவித்தார்.

வடமாகாணசபையின் 129வது அமர்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. அதன்போது அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் பிரேரணை ஒன்றை சபையில் சமர்பித்தார். குறித்த பிரேரணையை சமர்பித்து அவை தலைவர் உரையாற்றுகையில்,

ஏ.9 வீதியில் இரவு நேரங்களில் நிறுத்திவைக்கப்படும் வாகனங்களினால் அதிகளவு வாகன விபத்துக்கள் இடம்பெறுகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்னரும் கூட வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் சிலர் உயிரிழந்திருக்கிறார்கள். இவ்வாறு பல சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

இது தொடர்பாக வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பிரதி பொலிஸ்மா அதிபர்கள் கவனம் செலுத்தி வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், உள்ளுராட்சி மற்றும் போக்குவரத்து அமைச்சர் என்றவகையில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இந்த விடயம் தொடர்பாக கவனம் செலுத்தி வாகனங்களை தரித்து விடுவதற்கான இடங்களை உள்ளுராட்சி மன்றங்கள் ஊடாக எடுக்கவேண்டும் எனவும், வாகனம் பழுதடைந்தால் வீதியில் வாகனம் தரித்து விடப்பட்டுள்ளது. என்பதை அடையாளப்படுத்தும் வகையில் உரிய சமிக்ஞைகள் ஒளிரவிடப்படவேண்டும். எனவும் கூறினார்.

அதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம்,

கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மாவட்டங்களை சேர்ந்த சாரதிகளே அதிகளவான விபத்துக்களை சந்திக்கிறார்கள். இதற்கு பிரதான காரணகளில் ஒன்றாக குறித்த சாரதிகள் சுமார் 16 மணித்தியாலங்களுக்கும் மேலாக ஓய்வு எடுக்காமல் தொடர்ந்தும் வாகனம் செலுத்துகிறார்கள். அதனால் நித்திரை கொள்வதாலேயே விபத்துக்கள் உண்டாகின்றன.

எனவே தூர பயணங்கள் மேற்கொள்ளும் தனியார் பயணிகள் வாகனங்களுக்கு 2 சாரதிகள் பயன்படுத்தவேண்டும் என்பதை சட்டமாக்க வேண்டும். மேலும் பயணிகளை ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபடும் ஹயஸ் வாகனங்களை பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை போக்குவரத்து நியதிச்சட்டத்தின் கீழாவது பதியவேண்டும் என்றார்.

தொடர்ந்து மாகாணசபை உறுப்பினர் வி. தவநாதன் உரையாற்றுகையில் வடக்கில் கால்நடைகளாலேயே அதிகளவான விபத்துக்கள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து மாகாணசபை உறுப்பினர் ஜவாஹீர் உரையாற்றுகையில்

சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டு, சீருடை வழங்கப்பட்டுள்ள சில பொலிஸார் கொள்ளையர்கள் போன்று செயற்பட்டு , லஞ்சம் வாங்கும் வரை வீதி விபத்துக்களையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புக்களையும் தடுக்க இயலாது.

வெளிநாட்டில் இருந்து வருகிறவர்களிடம் லஞ்சம் வாங்குவதற்காக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சில ஹயஸ் வாகனங்களில் ஐந்திற்கும் மேற்பட்டவர்கள் பயணிக்கிறார்கள். ஆனால் சட்டத்தின்படி அவர்கள் அவ்வாறு பயணிக்க இயலாது. எனவே அதனை இறுக்கமாக நடைமுறைப்படுத்தவேண்டும் என்றார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More