முத்தலாக் சட்ட மசோதா நீண்ட இழுபறிக்குப் பிறகு மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது முத்தலாக் சட்டமசோதா, முஸ்லீம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடரின்போது மக்களவையில் நிறைவேறியது. எனினும், மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை பலம் பாஜக அரசுக்கு இல்லாமையினாலும், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பாலும் இழுபறி நிலையில் காணப்பட்டது.
இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் மழைக்கால கூட்டத் தொடரில் இந்த சட்ட மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது. இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகளுடன் ஒருமித்த கருத்தை எட்டுவதற்கான முயற்சியிலும் ஈடுபட்டது.
இந்நிலையில் முத்தலாக் மசோதாவில் சர்ச்சைக்குரிய சில அம்சங்களை நீக்கி விட்டு மத்திய அரசு சில திருத்தங்களை செய்துள்ளது. குறிப்பாக முத்தலாக் வழக்கில் கைது செய்யப்படும் நபர்களுக்கு பிணை கிடையாது என்ற விதிமுறை திருத்தம் செய்யப்பட்டு பிணை பெறலாம் என மாற்றப்பட்டுள்ளது. இச்சட்ட மசோதாவில் மூன்று திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டுள்ளார். இந்த திருத்தப்பட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
இதனையடுத்து முத்தலாக் மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டால், மீண்டும் மக்களவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். மக்களவை ஒப்புதல் கிடைத்ததும் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைத்ததும் சட்டமாகும்.
மூன்று முறை தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்தால் மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க இந்த சட்டம் வகை செய்கிறது.