எதிர்க்கட்சி தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருமலை நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனே தொடர்ந்தும் கடமையாற்றுவார் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். சபாநாயகர் தலைமையில் இன்று (10.08.18) காலை ஆரம்பிக்கப்பட்ட நாடாளுமன்ற அமர்வுகளின் இடையே இந்த அறிவிப்பை சபாநாயகர் வெளியிட்டு உள்ளார். அரசியல் யாப்பு மற்றும் நாடாளுமன்ற சம்பிரதாயங்களின் அடிப்படையில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை மாற்ற முடியாது என சபாநாயகர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் சுமார் 70 உறுப்பினர்களை கொண்டுள்ள தமக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என ஒன்றிணைந்த எதிரணி எழுத்து மூலம் கோரிக்கை விடுத்திருந்தது. இது தொடர்பில் கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதுடன், குறிப்பாக ஒன்றிணைந்த எதிரணி அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கருத்தை சபாநாயகர் பிரத்தியேகமாகக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை இடம்பெற்ற கட்சி தலைவர்களின் விசேட கூட்டத்திலும் இவ்விடயம் தொடர்பாக ஆரயப்பட்டுள்ளது. அத்துடன் சிறிலங்கா சுதந்திரக்கட்சி, மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆகியவற்றின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டு சபாநாயகர் இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.