வடக்கு மாகாண கூட்டுறவு அமைச்சுின் செயற்படுத்தப்படும் கூட்டுறவுக் கிராமிய வங்கியில் இடம்பெற்ற ஒரு கோடி ரூபா ஊழல் மோசடி தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வட மாகாண சபை உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மாகாணசபையின் நேற்றைய அமர்வில் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், கூட்டுறவு கிராமிய வங்கியின் சிமெந்து விற்பனையில் மோசடி இடம்பெற்றதாக பொதுமக்கள் முறைப்பாட்டுக் குழுக்கள் மற்றும் கணக்கு குழு ஆகியன கண்டறிந்திருந்ததாகவும அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
இந்த விடயம் சபையில் முதன்முறையாகப் பேசப்பட்டபோது 29 லட்சம் ரூபா பணமே ஊழல்மோசடி செய்யப்பட்டிருந்தாகவும் இன்று ஒரு கோடியே 6 லட்சம் ரூபாவாக அது வளர்ந்துள்ளதாகவும், எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார்.
வடக்கு மாகாணசபை பொறுப்பேற்ற பின்னர் நடந்த ஊழல் மோசடி இதுவெனக் கூறிய அவர் இது தொடர்பில் அதிகாரிகள் உரிய காலத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்தளவு தூரம் மோசடி நடைபெற்றிருக்க மாட்டாது என்றும் இனியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்ப முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவைள, இதுவரையும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்போது அதிகாரிகளை துரிதமாக நடவடிக்கை எடுக்கச் சொல்லி அவர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் என்ன செய்யப்போகிறீர்கள் என, ஆளும் கட்சி உறுப்பினர் அ.பரஞ்சோதி கேள்வி எழுப்பினார்.
‘அடுத்த அமர்வுக்கு முன்னதாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவ்வாறு தவறும் பட்சத்தில் எடுக்கவுள்ள நடவடிக்கை குறித்து இப்போது குறிப்பிட விரும்பவில்லை என்று அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம் கடுந்தெனியில் குறிப்பிட்டார்.
அத்துடன் கிளிநொச்சி பனைதென்னைவள கூட்டுறவுச் சங்கம், விசுவமடு பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பிலும் நடவடிக்கை எடக்கப்படவில்லை என்ன ஆளும் கட்சி உறுப்பினர்களான அ.பரஞ்சோதி, ஆ.புவனேஸ்வரன் ஆகியோர் சபையில் குற்றம் சுமத்தியமையும் குறிப்பிடத்தக்கது.