மாநிலங்களவையில் துணை சபாநாயகர் தேர்வு செய்யப்பட்ட பின்னர் காங்கிரஸ் குறித்து பிரதமர் மோடி தெரிவித்த கருத்தை சபாநாயகர் வெங்கையா நாயுடு அவைக்குறிப்பில் இருந்து நீக்கியுள்ளார்.
மாநிலங்களவை துணை சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட ஹரிவனாஷ் 20 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று துணை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.துணை சபாநாயகர் தேர்வு செய்யப்பட்ட பின்னர், அது தொடர்பாக அவையில் பேசிய பிரதமர் மோடி காங்கிரஸ் குறித்து சில கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
இதற்கு எதிராக, காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிபிரசாத் சபாநாயகர் வெங்கையா நாயுடுவிடம் முறையிட்டார். உயர் பொறுப்பில் உள்ள ஒருவர் இத்தகைய தரம் தாழ்ந்த கருத்துக்களை தெரிவிப்பது அழகல்ல என ஹரி பிரச்சாத் குறிப்பிட்டிருந்தார்.
ஹரி பிரசாத்தின் முறையீட்டை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் வெங்கைய நாயுடு, பிரதமர் மோடியின் அந்த கருத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்க உத்தரவிட்டார். பாராளுமன்றத்தில் பிரதமரின் கருத்துக்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவது அரிதான நிகழ்வாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.