பாகிஸ்தானில் முதல்முறையாக சிந்து மாகாணத்தில் இந்து மதத்தை சேர்ந்த விவாகரத்தான, மற்றும் கணவனை இழந்த பெண்களின் மறுமணத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்து மதத்தை சேர்ந்த பெண்கள் விவாகரத்து பெறவும், விவாகரத்தான பெண்கள் மற்றும் கணவரை இழந்த கைம் பெண்கள் மறுமணம் செய்து கொள்ளவும் அனுமதி அளிக்கும் வகையில் இந்து திருமண சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி உறுப்பினர் நந்த்குமார் என்பவர் பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாண சட்டசபையில் மசோதா ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
திருமண பருவத்தை எட்டாத வயதுள்ள சிறுமிகளை திருமணம் செய்யவும் தடை விதிக்க கோரிய இந்த சட்டதிருத்தம் சிந்து மாகாண சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கவர்னரின் கையொப்பத்துக்கு பிறகு கடந்த வாரம் இந்த சட்டம் அமலுக்கு வந்தது.
இந்த புதிய சட்டத்தின்படி திருமணமான இந்து மதத்தை சேர்ந்த ஆண், பெண் இருவரும் இனி விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகலாம். விவாகரத்தான பெண் மற்றும் அவரது குழந்தைகளுக்கு பொருளாதார பாதுகாப்பு வழங்கவும் இந்த சட்டம் வகை செய்கிறது. பாகிஸ்தானில் இதற்கு முன்னதாக விவாகரத்து கோரி இந்து பெண்கள் நீதிமன்றங்களை நாட முடியாத நிலை நீடித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.