பாகிஸ்தான் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள இம்ரான் கான், எதிர்வரும் 18-ம் திகதி அந்நாட்டின் பிரதமராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க வருமாறு இந்திய கிரிக்கெட் வீரர் சித்துவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீப் இ இன்சாப் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றிய தனிக் கட்சியாக உருவெடுத்தது. இதனை அடுத்து முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் எதிர்வரும் 18-ம் திகதி பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில், பதவியேற்பு விழாவில் பங்கேற்க முதலில் பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், பிறகு அந்த முடிவு மாற்றப்பட்டு, இம்ரான் கானின் முக்கிய நண்பர்களை மட்டுமே அழைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள், கபில் தேவ் உள்ளிட்ட இந்திய வீரர்கள் சிலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தவிரவும் தனது நெருங்கிய நண்பர்களை இம்ரான் கான் தொலைப்பேசி மூலமும் அழைப்பு விடுத்து வருகிறார்.
அந்த வகையில், முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய பஞ்சாப் மாநிலத்தின் அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு அலைபேசி மூலம் அழைப்பு விடுத்துள்ளார். முன்னதாக அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், தனிப்பட்ட முறையில் இம்ரான் கான் அழைப்பு அழைப்பு விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.