Home இலங்கை கட்டுநாயக்கா எயாப்போட்டோடை விட்டிட்டு வந்து, போகேக்க எடுத்திட்டு போங்கோவன்…

கட்டுநாயக்கா எயாப்போட்டோடை விட்டிட்டு வந்து, போகேக்க எடுத்திட்டு போங்கோவன்…

by admin

பொஸிற்றிவ் பொன்னம்பலம் – சனி முழுக்கு – 3


காலமையே சனி பிடிச்சமாதிரியாப்போச்சுது. மனுசி நேற்றைக்குச் சொன்னவள்தான். அதை இல்லை எண்டு சொல்லேல்லை.. சீனி வேண்ட மறக்காதையுங்கோ. வெள்ளணத் தேத்தண்ணி குடிக்கச் சீனி இல்லை எண்டு இரண்டு மூண்டு தரம் சொல்லிப்போட்டுத்தான் கோயில் காணப் போனவள். ஆனால் நான் தான் கதைப் புலாதியிலை மறந்து போனன். சீனி வேண்ட வேணும் எண்ட ஞாபகம் வரேக்கை பாத்தால் ஐயாத்துரை கடையைப் பூட்டிப் போட்டான். காலமை வேண்டுவம் எண்டு சொல்லிப்போட்டுப் படுத்திட்டன்.

எழும்பக் கொஞ்சம் சுணங்கிப்போச்சுது. தடார்.. பிடார்.. எண்டு குசினிக்கை சத்தம். அதோடை என்ரை பதிவிரதை கத்தியும் கேட்டிது. “காலமை குடிக்கிற தேத்தண்ணியைத்தன்னும் எப்பன் சந்தோஷமாக் குடிக்க விடுகிறியளே? வெறும் சாயைத்தைத்தான் குடிக்க வேண்டிக் கிடக்கு. அப்பு வீட்டை குமர்பிள்ளையா நான் இருக்கேக்கை , காலமையிலை உடன் கறந்த ஆட்டுப்பால் தேத்தண்ணிதான் ஆச்சி தாறவ. இஞ்சை சீனியை உள்ளங்கையிலை போட்டு நக்க வேண்டிக் கிடக்கு ” எண்டு பெரிய ஒப்பாரி. விசியம் என்னெண்டால் தாராளமாப் போட்டுக் குடிக்கச் சீனி இல்லை எண்டதுதான்.

அதுக்கு ஏதோ அவளின்ரை சீதனக் காணியை நான் விக்கக் கேட்ட மாதிரி காலத்தாலை ஒரே கலவரம். அதைப் பாத்த எனக்கு விசராக்கிப் போட்டுது. வாய் திறந்தால் பிரச்சினை கூடும் எண்டிட்டு போய் முத்தத்திலை கண்ணை மூடிக் கொண்டு இருந்திட்டன். கொஞ்ச நேரம் ஆளின்ரை சிலமனைக் காணேல்லை.பிறகு “டொக் ” எண்டு ஒரு சத்தம் கேட்டிது. பாத்தால் தேத்தண்ணியோடை ஒரு துண்டு பேப்பரிலை அரைத் தேக்கரண்டி சீனியை வைச்சிட்டு “நக்கிக் குடிச்சால்தான் சீனி இல்லாத அருமை தெரியும்” எண்டிட்டு உள்ளுக்கை போட்டா. “எட நக்கிறது எங்களுக்குப் புதுசே, என்ன? ஸ்ரீ மான்ரை காலத்திலை சக்கரையோடையும், பேரீச்சம்பளத்தோடையும், பனங்கட்டியோடையும் தேத்தண்ணி குடிச்சனாங்கள். சிலர் பினாட்டைக் கடிச்சுக் கொண்டு குடிச்சவையாம். ஆனால் நான் அதைக் காணேல்லை. பிறகு இடம்பெயர்விலை ஒண்டுக்கும் வழி இல்லாமல் இருந்தனாங்கள். அப்பிடி எங்களுக்கு எல்லாம் பழகிப்போச்சுது,” எண்டு நினைச்சுக் கொண்டு தண்ணியைக் கு டிச்சு முடிச்சன்.

முதல் வேலையா ஐயாத்துரை கடைக்குச் சீனி வேண்ட வெண்டு போனன். “அண்ணை எப்பன் பொறு” எண்டிட்டு அப்பதான் ஐயாத்துரை மஞ்சள்தண்ணி தெளிச்சு படத்துக்கு விளக்கு வைச்சுக் கொண்டிருந்தவன். எனக்குப் பிறகும் இரண்டு மூண்டு பேர் வர, கடையடியிலை சனங் கூடிவிட்டுது. மனுசி முழுகிப்போட்டு வாறதுக்கு முன்னம் சீனியைக் கொண்டு போயிடலாம் எண்டால் சரிவராது போலை கிடக்கு எண்டு யோசிச்சுக் கொண்டு நிக்க, முத்துலிங்கத்தின்ரை பேரன் பச்சை நோட் ஒண்டோடை ஆத்துப் பறந்து வந்தான். தனக்கு முன்னம் நாலைஞ்சு பேர் நிக்கினம். ஐயாத்துரை கதிரையிலை ஏறிப் படத்தடியிலை நிக்கிறான் எண்ட ஒரு கரிசனையுமில்லாமல் “ஐயாத்துரை அண்ணை….ஐயாத்துரை அண்ணை ரொயிலற் பேப்பர் றோல் ஒண்டு தாருங்கோ ” எண்டு கத்தினபடி ஆயிரத்தை நீட்ட, “பொறடா” எண்டு ஐயாத்துரை கத்தின சத்தத்திலை பெடி பயந்திட்டிது. கொஞ்ச நேரம் நிண்டம். ஐயாத்துரை வந்த ஓடரின்படி எனக்கு முதல் சீனியைத் தந்தான். நான் அதை வேண்டிக் கொண்டு வந்து கொஞ்சம் தள்ளி மருதமரத்தடியிலை முத்திலிங்கத்தின்ரை பேரன் வாறவரைக்கும் அவனைக் கதை கேப்பம் எண்டு நிண்டன்.

ஒரு கையிலை ரொயிலற் றோல் பக்கற். மற்றக் கையிலை சில்லறைக்குப் பதிலா குடுத்த இரண்டு பபிள் கம். அதிலை ஒண்டைக் கையிலையும் மற்றதை வாயுக்கையும் வைச்சுக் கொண்டு வந்தவனைிட்டை “ டே .. பேரா? ரொயிலற் றோலோடை வாறாய். ஆரேன் வெளிநாட்டிலை இருந்து வந்திருக்கினமோ? எண்டு கேட்டன். “இல்லை. திருவிழாவுக்கு வந்தவை எல்லாரும் போன கிழமையே போவிட்டினம். “ எண்டான். “அப்ப ஏனெடா உதை வேண்டிக் கொண்டு போறாய்” எண்டு கேட்டன்.“அது அம்மா பாவிக்கிறவ. சித்தி வந்து காட்டிக் குடுத்திட்டுப் போனாப் பிறகு இப்ப அம்மா இதைத்தான் பாவிக்கிறவ” எண்டான். “என்னடா கறுமம் இது. அந்தக் குளிருக்கை தண்ணி பட்டால் குளிரும் எண்டிட்டு வெள்ளைக்காரன் கடுதாசியாலை துடைக்கப் போய் இப்ப எங்கடை சனமும் அதைப் பழகிவிட்டினம். பறவாயில்லை, வந்து இஞ்சை வெக்கேக்கை இருக்கிற ஆக்களுக்கும் உதைப் பழக்கிப் போட்டுப் போனகினமெல்லே! அதுான் எனக்கக் கவலை” எண்டு யோசிச்சபடி நடந்தன். எனக்குத் தலை கிறுகிறுக்கத் துவங்கிவிட்டுது.

எட எங்கடை முந்தின சனம் எல்லா பழக்க வழக்கத்துக்கும் பின்னாலை ஒரு இயற்கை இரகசியத்தை வைச்சிருக்கினம் எண்டதை விளங்காமல் எல்லாத்தையும் மாத்திக் குழப்பி, கூழாம் பாணியாக்கிப் போட்டிருக்கினம் இப்பத்தேயுள்ளவை. முந்தின காலத்திலை எல்லாற்றை வீட்டிலையும் ரொயிலற் வசதி கிடையாது. பொம்பிளையள் எல்லாரும் வீட்டுக்குப் பின்னாலையும். ஆம்பிளையள் எல்லாரும் வீட்டுக்குக் கிட்ட பனை இருந்தால் பனை வெளிக்கும், பத்தை மறைவிலையும் போறதாத்தான் நிலமை இருந்தது.

முந்தின ஆக்கள் எதுக்கெடுத்தாலும் ஒரு இயற்கை விஞ்ஞான விளக்கம் சொல்லுவினம். அதாவது தண்ணியாலை கழுவேக்கை கைவிரலுகள் எல்லாம் அண்டத்திலை படுமாம். அப்ப கைவிரல் நுனியிலை இருக்கிற மின்னலைகள் எல்லாம் அண்டத்திலை (குண்டலினி) பட்டு ஒரு மின்சார சுழற்சியை உடம்பிலை உண்டாக்குமாம். அது உடம்புக்கு ஒரு புத்துணர்ச்சியைத் தரும் எண்ட விஞ்ஞான விளக்கத்தோடை பழக்கின பழக்கத்தை உந்த ரொயிலற் பேப்பர் கலாச்சாரம் வந்து கெடுத்துப்போட்டுது.

அது தானா வரேல்லை. போனவை அதைப் பழகிக் கொண்டு வந்து விட்டிட்டுப் போறது. சரி வாறனியள் அங்கத்தை சூழ்நிலையிலை பழகினதை எல்லாத்தையும் கட்டுநாயக்கா எயாப்போட்டோடை விட்டிட்டு வந்து இஞ்சத்தைச் சூழ்நிலைக்கேத்தாப்போலை நடவுங்கோ பாப்பம்.. பிறகு திரும்பிப் போகேக்கை விட்டதெல்லாத்தையும் கட்டுநாயக்காவிலை எடுத்துக் கொண்டு பிளேன் ஏறுங்கோ வன் .ஆர் வேண்டாம் எண்டு சொன்னது!

இப்ப முத்திலிங்கத்தின்ரை மேளுக்குத் தங்கைக்காரி வந்து துடைக்கிற பழக்கத்தைப் பழக்கிப்போட்டுப் போட்டாள் எண்டு வைச்சுக் கொள்ளுங்கோ.ரொயிலற் பேப்பரின்ரை விலை என்ன? அப்ப மாதத்துக்குச் செலவென்ன? முத்திலிங்கத்தின்ரை மருமோனின்ரை சம்பளம் என்ன? பெடிச்சி ரொயிலற் பேப்பரோடை நிக்கேல்லை. இப்ப அவளும் பிள்ளை குட்டியளும் “கோக் ” இல்லாமல் மத்தியானச் சாப்பாடு சாப்பிடுகினமில்லையாம்.

அதோடை போற வாறதெல்லாம் ஓட்டோவிலைதானாம். அது மாதிரி எத்தினை எத்தினை அரியண்டங்கள் நடக்கிது தெரியுமே? அப்ப வாறவை இதை யோசிக்கிறேல்லை. நிக்குமளவுக்கும் சதிராடிப் போட்டுப் போவிடுவினம். இருக்கிறவைக்கெல்லோ கழுத்திலை கயிறு. அப்ப எங்களுக்குத் தோதில்லாத விசியத்தைத் தலையிலை தூக்கி வைக்கிறதாலை வாற வில்லங்கங்கள் என்ன எண்டதை அடுத்த சனிக்கிழமையும் சொல்லுவன்.
– பொஸிற்றிவ் பொன்னம்பலம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More