மதத்தின் பெயரால் அரசியல் செய்யாதவர் கருணாநிதி, அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார். மணிரத்தினம் இயக்கிய இருவர் படத்தில் திமுக தலைவர் கருணாநிதியாக நடித்து பாராட்டடை பெற்ற இவர் பிரகாஷ்ராஜ். கருணாநிதியின் முழு வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டால் அதில் நடிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் நடிகர் பிரகாஷ் ராஜ் கூறி இருப்பதாவது:-
‘இருவர் படத்தில் நடித்த போது நான் கருணாநிதியை சந்திக்கவில்லை. அந்த படத்தில் நான் நடிக்க ஒப்புக் கொண்டபோது எனக்கு 30 வயது தான். அந்த சமயத்தில் கருணாநிதி தமிழக முதல்வராக இருந்தார். இருவரில் நடித்தபோது, மணிரத்னத்தின் வழியாக நான் கருணாநிதியை பார்த்தேன். கருணாநிதியின் பேச்சுகள் அடங்கிய டேப்புகளை என்னிடம் அளித்தார்.
எனக்கு காப்பியடிக்க வராது மணி என்று நான் கூறியது நினைவிருக்கிறது. அவர் போன்று அப்படியே நடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். நான் அவர் உயரம் இல்லை, நிறம் இல்லை, அவர் போன்று எனக்கு பேசவும் வராது. கதைப்படி நான் சிறப்பாக செய்வேன் என்று தெரிவித்தேன். நான் கருணாநிதி பற்றி நிறைய ஆய்வு செய்தேன். அவரை பற்றி படிக்கப் படிக்க எனக்கு அவரின் வாழ்க்கை மிகவும் பிடித்துவிட்டது. அவர் மீதான மரியாதையும் அன்பும் மேலும் அதிகரித்தது. அவருக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையே இருந்த நட்பு குறித்து அறிந்து அசந்து போய்விட்டேன்.
பல ஆண்டுகள் கழித்து ஒரு வழியாக நான் கருணாநிதியை நேரில் சந்தித்தேன். நான் படத்தில் நடித்த கதாபாத்திரம் போன்று இல்லாமல் வித்தியாசமாக இருந்தார். இருவர் பிடித்திருந்ததா? கொஞ்சமாவது உங்களை போன்று நடித்தேனா? என்று நான் கருணாநிதியிடம் கேட்டேன். ஆமாம் கிட்டத்தட்ட என்று அவர் கூறினார். அதன் பிறகு நாங்கள் படம் பற்றி மீண்டும் பேசவே இல்லை.
கல்கி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருது வாங்கிய நாள் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அந்த அரங்கில் இருந்தவர்கள் அனைவரும் டென்ஷனில் இருந்தார்கள். தன் கதாபாத்திரத்தில் நடித்த நபரை பார்த்துவிட்டு கருணாநிதி என்ன செய்வார் என்பதை தெரிந்துகொள்ள அனைவரும் ஆவலாக இருந்தனர். பிரகாஷ்ராஜூக்கு இந்த விருதை கொடுப்பதில் ஆனந்தம். இது அவருக்கு தெரியும், எனக்கு தெரியும். எங்கள் இருவருக்கும் தெரியும் என்றார். இருவர் படத்திற்கு முதலில் ஆனந்தம் என்றே பெயர் வைக்கப்பட்டிருந்தது.
அதன் பிறகு நாங்கள் அடிக்கடி சந்தித்து பேசிக் கொண்டோம். மணிக்கணக்கில் அரசியல் பற்றி பேசுவோம். ஒன்றாக காபி குடிப்போம், வாக்கிங் போவோம். அதற்காக எங்களுக்கு இடையே கருத்து வேறுபாடு இல்லை என்று கூறமாட்டேன். அவரை நாம் முழுதாக புரிந்து கொள்ளவில்லை. மதத்தின் பெயரால் அரசியல் செய்யாத அவரை நான் எப்பொழுதுமே மதிக்கிறேன். அவர் தமிழகத்தில் ஜனநாயக விதையை விதைத்தார். அவர் துவங்கியதை யாராலும் மதத்தை வைத்து மாற்ற முடியாது. இன்னொரு கருணாநிதியை பார்ப்போமா என்பது சந்தேகமே. கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டால் அவர் கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்க விரும்புகிறேன்’.