தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 3-வது தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானம், நெல்லை சங்கர் நகர் ஐ.சி.எல். மைதானம், திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானம் ஆகிய 3 இடங்களில் தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டிகள் நடைபெற்றன.
கடந்த மாதம் 11-ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் 8 அணிகள் பங்கேற்றன. 5-ம் திகதியுடன் லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன.இதன் முடிவில் திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ், காரைக்குடி காளை ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன.
இந்நிலையில், அரை இறுதி ஆட்டங்களில் வெற்றிபெற்ற அணிகளுக்கு இடையிலான டிஎன்பிஎல் போட்டியின் இறுதி ஆட்டம் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் ஜெகதீசன் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், ரோகித் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதுகின்றன.
இரு அணிகளும் இந்தப் போட்டித் தொடரில் 3-வது முறையாக மோதுகின்றன. இதில் திண்டுக்கல் அணியே 2 முறை வெற்றிபெற்றுள்ளது. இதனால் அந்த அணி டிஎன்பிஎல் வெற்றிக் கிண்ணத்தை முதல் முறையாக கைப்பற்றும் நம்பிக்கையுடன் இருக்கிறது. இரு அணிகளும் சம பலத்துடன் மோதுவதால் இன்றைய இறுதிப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.