முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்கரைப் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட மீன்பிடித் தொழிலினை மேற்கொள்ளுபவர்களது நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி கடந்த பத்து நாட்களாக போராட்டம் இடம்பெற்று வந்தது.
இந்த நிலையில் கடற்தொழில் நீரியல் வளங்கள் மற்றும் கிராமிய அமைச்சர் விஜித் விஜய முனி சொய்சா முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு போராட்டத்தில் ஈடுபடும் மக்களை சந்தித்தார்.
கடந்த 2ஆம் திகதி முதல் முல்லை கடற் தொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்களை சந்தித்த அமைச்சர் தடைசெய்யப்பட்ட தொழிலினை முன்னெடுக்கும் செயற்பாடு தடை செய்யப்பட்டுள்ளதாக உறுதி அளித்தார்.
முன்னதாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது. அமைச்சர் விஜித் விஜய முனி சொய்சா தலைமையிலான குழு முல்லை மாவட்ட அரச அதிபர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் இது தொடர்பில் ஆராய்ந்தனர்.
இந்த சந்திப்பில் கலந்துகொண்ட முல்லை மாவட்ட மீனவர்கள் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துரைத்தனர். தடைசெய்யப்பட்ட தொழிலினை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் இதன்போது உறுதி அளித்தார்.