ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு மேல் போராட்டத்தில் பங்களித்த ஆதவனுக்கு இன்று ஒரு கால் இல்லை. போர்க்களத்தில் இழந்து விட்டார். கால் இழந்த பிறகும் தயக்கமோ தளர்வோ இல்லாமல் போராட்டப்பணிகளைச் செய்தார் ஆதவன்.
இறுதி யுத்தத்திற்குப் பிறகு தடுப்பில் (புனர்வாழ்வு முகாமில்) மூன்று ஆண்டுகள் சிறைவாசத்தை அனுபவித்த பிறகு விடுதலையான ஆதவன், .செஞ்சோலையில் வளர்ந்த ஸ்ரீதேவியைத் திருமணம் செய்தார். 2015 இல் திருமணம் செய்த ஆதவன் ஸ்ரீதேவி தம்பதிகளுக்கு இரண்டு பிள்ளைகள். மூத்த பிள்ளைக்கு வயது இரண்டரை. இரண்டாவது பிள்ளைக்கு மூன்று மாதங்கள்.
இயக்கத்திலிருந்தபோது (கால் இழந்த பிறகு) பயின்ற இலத்திரனியல் தொழில்நுட்பத்தை வைத்துக் கொண்டு நடமாடித் தொழில் செய்து வந்தார் ஆதவன். இந்த நிலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட சுகவீனத்தினால் ஆதவனுடைய மனைவி ஸ்ரீதேவி நேற்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இறந்து விட்டார்.
ஆதவன் குடும்பத்துக்கு என்று இதுவரையில் ஒரு வீடில்லை. நிரந்தரத் தொழில் இல்லை. இந்திய அரசின் வீட்டுத்திட்டம், சுவிஸ் நாட்டின் வீட்டுத்திட்ட உதவி, இதைவிட வெவ்வேறு உதவித்திட்டங்களின் வழியாக எல்லாம் பல்லாயிரம் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், ஆதவனுக்குக் கிடைக்கவில்லை. அவரும் பல கதவுளைத் தட்டினார். எதுவும் திறக்கவில்லை.
பலரிடமும் தன்னுடைய கோரிக்கைகளைக் கேட்டார். யாரும் செவி மடுக்கவில்லை. அவர் திருமணம் செய்தது பிந்திய காலப்பகுதி என்றபடியால் பதிவுகள், விவரச் சேகரிப்புகள் போன்ற நிர்வாக நடைமுறையினால் இதற்கு வாய்ப்பில்லை. அல்லது வாய்ப்புக் குறைந்திருந்தது என்று காரணங்கள் சொல்லலாம். தற்காலிக வீட்டைக் கூடவா வழங்க முடியாமல் போய் விட்டது என்று கேட்கிறார் ஆதவனின் தாயார். இந்தக் கேள்விக்கு யாருமே பதில் சொல்லவில்லை.
இதுவரையிலும் ஆதவன் குடும்பத்தை வந்து எட்டியே பார்க்காத அரசியல்வாதிகள் எல்லாம் இன்று வந்து மரண நிகழ்வில் அனுதாபம் தெரிவித்துக் கொண்டு போகிறார்கள். எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டேயிருக்கிறார்க்கிறார்கள் கூடியிருக்கும் சனங்களும் போராளிகளும். இதைப்பற்றியெல்லாம் நாம் பேசியென்ன எழுதியென்ன என்று காக்கா அண்ணையும் நானும் பேசிக் கொள்கிறோம்