இங்கிலாந்திற்கு எதிரான படுதோல்வியால் ரவி சாஸ்திரி, விராட் கோலியிடம் பல கேள்விகளை எழுப்ப பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இங்கிலாந்து – இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் பெரிய அளவில் விமர்சனம் எழும்பவில்லை.
ஆனால் நேற்று முன்தினம் முடிவடைந்த லார்ட்ஸ் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வியடைந்தது. இதனை இந்திய முன்னாள் வீரர்கள் மற்றும் பிசிசிஐ-யால் ஜீரணிக்க முடியவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்திய அணி 3-வது போட்டியில் எதிர்வரும் சனிக்கிழமை நொட்டிங்காம் டிரென்ட் பிரிட்ஜ்-யில் விளையாடுகிறது. ஞாயிற்றுக்கிழமை அடுத்த இரண்டு போட்டிக்கான அணி அறிவிக்கப்பட இருக்கிறது. 3-வது போட்டியில் தோல்வியடைந்தால் இந்தியா தொடரை இழக்கும் நிலை ஏற்படும்.
இதனால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி மற்றும் அணித் தலைவர் விராட் கோலியிடம் கேள்விகள் கேட்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதேவேளை 2014-ம் ஆண்டு இந்திய அணி 1-3 என இங்கிலாந்து தொடரில் தோல்வியடைந்தமையினால் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த டங்கன் பிளெட்சர், துணை பயிற்சியாளர்கள் ஜோ தவேஸ்), டிரெவோர் பென்னி ஆகியோர் நீக்கப்பட்டு ரவி சாஸ்திரி முகாமையாளராக நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.