Home இலங்கை தமிழ்த் தலைவர்களின் தூரநோக்கற்ற சிந்தனைகளும், இறுமாப்பும்அகந்தையும் அரசியல் பின்னடைவுகளுக்கு காரணம்..

தமிழ்த் தலைவர்களின் தூரநோக்கற்ற சிந்தனைகளும், இறுமாப்பும்அகந்தையும் அரசியல் பின்னடைவுகளுக்கு காரணம்..

by admin

இன்றைய இந்த நிகழ்வைத் தலைமை தாங்கி நடாத்திக் கொண்டிருக்கின்ற மூத்த கணித ஆசிரியர் திரு.சு.டு. தேவராஜா அவர்களே, சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டிருக்கின்ற வடக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ ஆ.மு. சிவாஜிலிங்கம் அவர்களே,வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.சி. நந்தகுமார் அவர்களே, ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை கோப்பாய் சிரேஸ்ட விரிவுரையாளர் திரு.சி.குணசீலன் அவர்களே,கௌரவ விருந்தினர்களே, சிறப்பு விருந்தினர்களே, சகோதர சகோதரிகளே, குழந்தைகளே!

இன்றைய தினம் ஊhiவாயஅடியசய றுநடட றுiளாநசள நேவறழசம ஐஐ pடரள இங்கிலாந்து ஏற்பாட்டில் பாடசாலைகளுக்கிடையே நடாத்தப்பட்ட கணிதப் போட்டிப் பரீட்சைக்கான பரிசளிப்பு விழா நிகழ்வுகளில் இந்த வருடமும் இரண்டாவது தடவையாக கலந்து கொண்டு உங்கள் முன் உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன்.

இன்றைய இந் நிகழ்வானது வழமையான விழாக்கள் போன்று களியாட்ட நிகழ்வாகவோ அல்லது திறப்பு விழா போன்றதொன்றாகவோ அமையாமல் எமது இளைய தலைமுறையை குறிப்பாக குழந்தைகளின் கல்வியை நோக்கியதொரு வழிகாட்டல் நிகழ்வாக அமைக்கப்பட்டுள்ளது. வடபகுதியில் மட்டுமன்றி இலங்கையின் ஏனைய பாகங்களிலும் சர்வதேச ரீதியாக இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து என அனைத்து நாடுகளிலும் இப் பரீட்சைகள் நடாத்தப்பட்டு மாணவர்கள் கௌரவிக்கப்படுகின்றார்கள். இவ்வாறான ஒரு நிகழ்வில் கலந்துகொள்வது ஒரு மனஎழுச்சியைத் தருவதாக இருக்கின்றது.

நெருக்கடியான நேரங்களில் ஏற்பட்ட இடப்பெயர்வு காரணமாக தமிழ் மாணவர்களின் வீழ்ச்சியடைந்த கணித அறிவை மேம்படுத்துவதற்காக பல நீதியரசர்கள், அரச அதிபர்கள் மற்றும் கல்விமான்களை உள்ளடக்கிய சிதம்பரா கல்லூரியின் பழைய மாணவர்களினதும் ஐக்கிய இராச்சியம் வல்வை நலன்புரிச் சங்கத்தினரதும் ஏனைய பல நலன்விரும்பிகளினதும் உழைப்பால் ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பே சிதம்பரா கணிதப் போட்டிப் பரீட்சை என்பது.

2012ம் ஆண்டில் லண்டன் மாநகரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பானது இப்பொழுது இங்கிலாந்து,அமெரிக்கா, கனடா,இலங்கை, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து போன்ற நாடுகளில் ஒரே நாளில் இப் பரீட்சைகளை நடாத்தி வருகின்றது. இந்த வருடம் கிட்டத்தட்ட 12,000 மாணவர்கள் இப் பரீட்சைக்கு தோற்றியுள்ளதாகக் கூறப்படுகின்றது. கடந்த வருடம் இலங்கையில் 2,800 மாணவர்களே இப் பரீட்சைக்கு தோற்றிய போதும் இந்த வருடம் 6,800 மாணவர்கள் தோற்றியிருப்பது இப் பரீட்சையின் தராதரத்தை அளவிடுவதற்கான ஒரு சிறந்த அளவுகோலாக அமைகின்றது எனக் கருதுகின்றேன்.

இலங்கையில் இந்தப் பரீட்சை தரம் 4 தொடக்கம் 9 வரையான மாணவர்களிடையே நடாத்தப்படுகின்றதாக அறிகின்றேன். கடந்த வருடம் நடைபெற்ற பரீட்சையில் அதியுயர் புள்ளிகளைப் பெற்ற மாணவர்களை இந்த வருடம் 14.07.2018ல் லண்டன் மாநகரில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு அழைத்து அந்த மாணவர்கள் அங்கும் கௌரவிக்கப்பட்டதாக அறிந்து பெருமைப்பட்டேன். அதே போன்று இந்த வருடம் அதியுயர் புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் இன்று இங்கே கௌரவிக்கப்படுகின்றார்கள். அவர்களுக்கும் அடுத்த வருடம் லண்டன் மாநகரம் செல்வதற்கான ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என எண்ணுகின்றேன்.

இவ்வாறான முன்மாதிரியான நிகழ்வுகளை இந்த அமைப்பு முன்னெடுப்பதன் ஊடாக மாணவர்கள் இயல்பாகவே கணித பாடத்தில் கூடுதலான கவனம் செலுத்துவதற்கும் அவர்களை பயிற்றுவிக்கின்ற ஆசிரியர்கள் தமது மாணவர்களுக்கும் லண்டன் செல்லக்கூடிய இந்த அரியவாய்ப்பு கிட்டவேண்டும் என்ற மனப்பாங்கில் மேலதிக கவனம் செலுத்தி கல்வி கற்பிப்பதற்கும் இது ஒரு உந்துகோலாக அமையும்.

சிதம்பரா கணிதப் போட்டி அமைப்பினர் தமது சேவைகளை இவ்வாறான பரீட்சைகளை நடாத்தி மாணவர்களை ஊக்குவிக்கின்ற இந்த நிகழ்வுடன் நிறுத்திக் கொள்ளாது வடக்கு கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் ஆதரவற்ற மாணவர்கள் ஒரு தொகுதியினரை தெரிவு செய்து அவர்களிற்கான தங்குமிட வசதி, உணவு வசதி ஆகியவற்றை ஏற்படுத்திக் கொடுப்பதுடன் 2019ம் ஆண்டில் இலவசமாக கல்வி கற்பிப்பதற்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். கல்வியின்பால் அவர்கள் கொண்டிருக்கின்ற மதிப்பையும் அதே நேரம் இங்கிருக்கும் உறவுகளின் கல்வி வளர்ச்சியில் புலம்பெயர்ந்த சமூகம் காட்டும் அதிகூடிய அக்கறையையும் இவர்களின் இந்த செயற்பாடு எடுத்துக் காட்டுகின்றது. இவ்வாறான உள்ளுர் உறவுகளுடனான புலம்பெயர் சமூகத்தினரின் கூட்டுறவே எம்மை எதிர்காலத்தில் வாழ வைக்கும்.

கடந்த வருடம் இப் போட்டிப் பரீட்சைகளில் வெற்றி பெற்றவர்களுக்காக பணப் பரிசில்களை வழங்குவதற்கு சுமார் 980,000 ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அத்தொகையை பகிர்ந்து வங்கிக் கணக்கில் இட்டு வங்கிப் புத்தகங்களாக அவர்களுக்கு கையளிக்கப்பட்டன. அதேபோன்று இந்த வருடம் இலங்கையில் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான பரிசுத் தொகையாக கிட்டத்தட்ட 1,900,000ஃஸ்ரீ ரூபா அவர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்பட்டு புத்தகங்கள் கையளிக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
30 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற யுத்தத்தின் காரணமாக எமது பிரதேசத்தில் பல்லாயிரக் கணக்கான மாணவர்கள் கல்வி நிலையில் பின்தள்ளப்பட்டனர.; அவர்களின் குடும்பங்களும் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகினர். வீடு, வாசல் சொத்துக்களை இழந்து தொழில் முயற்சிகளின்றி அல்லற்பட்டுக் கொண்டிருந்த சூழ்நிலையில் அவர்களுக்கான விரைந்த உதவிகள் நேரடியான உறவுகளின் மூலமாகவும் புலம்பெயர் அமைப்புக்களின் ஊடாகவும் வழங்கப்பட்டன. அந்த உதவிகள் அவர்களின் அன்றாட வாழ்க்கைச் செலவுகளை ஈடுகொடுக்கக்கூடிய அளவில்தான் அமைந்துள்ளன. அத்துடன் இவ்வாறான உதவிகள் நீண்டகாலத்திற்கு தொடர்ந்து வழங்கப்படமுடியாதவை. அத்துடன் இவ்வாறான உதவிகளை வெளிநாடுகளில் இருந்து எமது புலம்பெயர் உறவுகள் தொடர்ந்து வழங்கிவருகின்ற போதும் இங்கிருக்கும் அதன் பயனாளிகள் சுயமாக பொருள் தேடும் தொழில் முயற்சியை முழுமையாகக் கைவிட்டு எந்த நேரமும் மற்றையவர்களின் கைகளை எதிர்பார்க்கின்ற ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இது வருந்தத்தக்க செயல்.

இவ்வாறான ஒரு சமூக அமைப்பை உருவாக்குவது பொருத்தமற்றது. எனவேதான் எமது மக்களுக்கு வழங்குகின்ற உதவிகள் அவர்களின் முயற்சியுடன் ஏதாவதொரு வகையில் அவர்கள் பொருட் தேட்டங்களை மேற்கொள்ளக்கூடிய ஒரு மூலதனமாக அல்லது நிரந்தர தொழில் வாய்ப்பைப் பெறக்கூடியதாக அமைவதற்கு ஏற்ற வகையில் அவை வழங்கப்படல் வேண்டும். ஓரிரு தினங்களுக்கு முன்னர் முல்லைத்தீவு பகுதியில் ஒரு பால் பதனிடும் தொழிற்சாலை ஒன்றை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகின்ற போது இவ் விடயத்தை அங்கும் குறிப்பிட்டிருந்தேன். எமது உற்பத்திகள் மூலப்பொருட்களில் இருந்து இறுதி வடிவ பாவனைப் பொருட்களாக மாறும் வரையான அனைத்து நடவடிக்கைகளும் எமது பகுதிகளிலேயே மேற்கொள்ளப்படுகின்ற போது இங்குள்ள படித்த இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. உற்பத்திகளில் கிடைக்கின்ற வருமானங்களும் எமது மக்களிடையே பகிரப்படுகின்றது.

எனவேதான் உள்ளூர்த் தயாரிப்புக்கள் மிகவும் விரும்பப்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து பலதரப்பட்ட மக்கள் இங்கு பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக வருகை தருகிறார்கள். அத்துடன் தெற்கில் இருந்தும் திட்ட முன்மொழிவுகளைத் தருகின்றார்கள். ஆனால் அவர்களின் திட்டமுன்மொழிவுகளை ஆராய்ந்து பார்த்தால் அவை பெரும்பாலும் நிலச்சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட திட்டங்களாகவோ அல்லது இப் பகுதிகளில் உள்ள கனியவளங்களையும் ஏனைய உற்பத்திகளையும் சுரண்டிச் செல்லுகின்ற திட்டங்களாகவோ அமைந்திருப்பதைக் காணலாம்.

இலங்கை சுதந்திரம் பெற்ற தினத்தில் இருந்து இன்று வரை எமது தமிழ்த் தலைவர்களின் தூரநோக்கற்ற சிந்தனைகளும், இறுமாப்புத் தன்மையும், அகந்தையும், சமூக வேறுபாட்டுக் கொள்கைகளும் மற்றும் இன்னோரன்ன காரணிகளே நாம் தொடர்ச்சியாக அரசியல் பின்னடைவுகளை சந்திப்பதற்கான ஏதுக்களாக இருந்து வந்துள்ளதை நாம் காண்கின்றோம். இந்த நிலையில் நாம் எமது இருப்புக்களை உறுதி செய்து எம் மீது திணிக்கப்படுகின்ற அரசியல் அழுத்தங்களிற்கு முகம்கொடுத்து எமது மக்களைப் பாதுகாக்க வேண்டுமாயின் அதற்குரிய கல்வி நிலையை நாம் பெற்றுக் கொள்ள முனைப்புடன் செயலாற்ற வேண்டும். அன்றைய மாணவர்கள் குருகுலக் கல்வி முறையின் கீழ் தமது கல்வி அறிவுகளை கல்வியில் மேம்பட்ட ஆசிரியர்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்கள். அன்றைய ஆசிரியர்களும் கற்பித்தல் சேவையை கடவுளுக்கு ஒப்பான சேவையாகவே கருதிச் செயற்பட்டுவந்தார்கள். இன்று மாணவர்களிடம் கீழ்ப்படியுந் தன்மை அருகி வருகின்றது. அத்துடன் ஆசிரியர்களுந் தமது கற்பித்தல் கடமைகளை ஒரு பொழுதுபோக்குக் கடமையாக மேற்கொண்டிருப்பது வேதனை அளிக்கின்றது.

இந் நிலைமைகள் விரைந்து சீர்செய்யப்பட வேண்டியுள்ளன. ஆசிரியர்களின் கைகளில் பணப்புழக்க நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டபின்னர் பெரும்பாலான ஆசிரியர்கள் ஆசிரியர்களாக இல்லாமல் கொந்தராத்து முகவர்களாக மாற்றப்பட்டுள்ளார்கள். எந்த நேரமும் கட்டட வேலை, விழாக் கொண்டாட்ட முன்னெடுப்புக்கள் என அவர்களின் நேரங்கள் கற்பித்தல் தவிர்ந்த ஏனைய கடமைகளில் வீணடிக்கப்படுகின்றன.

பிரத்தியேகக் கல்வி நிலையங்களில் சிறப்பாக செயற்படுகின்ற ஆசிரியர்கள் அதே முனைப்புடன் பாடசாலைகளில் செயற்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு பொது மக்களிடமிருந்து எழுவதை நாம் பலதடவைகளில் அவதானித்திருக்கின்றோம். அதே போன்று மருத்துவ நிபுணர்களும் அரச மருத்துவ நிலையங்களில் மருத்துவக் கடமைகளில் ஈடுபடுவதற்குப் பதிலாக பிரத்தியேக நிலையங்களை நோக்கியே ஓடுகின்றார்கள்.

தினம் தினம் பத்திரிகைகள் தாங்கி வருகின்ற செய்திகள் எம்மைத் திகைக்க வைக்கின்றன. ஒரு காலத்தில் முழு இலங்கைக்கும் முன்மாதிரியாக, எடுத்துக்காட்டாக விளங்கிய வடபகுதி இன்று இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது வேதனைக்குரியது.

இவற்றையெல்லாம் சீர் செய்ய ஸ்திரமான ஒரு அரசியல் அமைப்பும் அதைத் தயாரிக்க மக்கள் பங்களிப்பும் அவசியமானவை. அதற்கான வழிமுறைகளை நாம் அனைவரும் இணைந்துகொண்டு முன்னெடுக்க வேண்டும்.

வடமராட்சி மண் கல்வியின் விளை நிலம். இங்குள்ள மாணவர்கள் கல்வி அறிவுகளில் இயல்பாகவே மேம்பட்டவர்கள். தற்போது காணப்படுகின்ற இந்தப் பின்னடைவு தற்காலிகமானதே. இவை விரைவில் சீர்செய்யப்படக்கூடியன. அதற்கான முயற்சிகளில் ஈடுபடுகின்ற அமைப்புக்களில் ஒன்றாக Chithambara Well Wishers Network  II plus  அமைப்பு விளங்குகின்றது. உங்கள் முயற்சிகள் சிறப்புற அமைய எனது வாழ்த்துக்களைத் தெரிவித்து நிறைவு செய்கின்றேன்.
நன்றி
வணக்கம்

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

Chithambara Maths Challenge ஏற்பாட்டில்
பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட
கணிதப் போட்டிப் பரீட்சைக்கான
பரிசளிப்பு விழா-2018
தீருவில் இளைஞர் விளையாட்டுக் கழக மைதானம், வல்வெட்டித்துறை
14.08.2018 செவ்வாய்க்கிழமை பி.ப 2.30 மணியளவில்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More