பருத்திச்சேனை கிராமத்தை மையமாகக் கொண்டது…
நீர்வளம், நிலவளம் சூழப்பெற்ற மீன்பாடும் தேன்நாடாம் மட்டுநகரின் எழில் கொஞ்சும் பிரதேசங்களில் ஒன்றாக விளங்குவதே ‘கன்னன்குடா’ பிரதேசமாகும். கன்னன் குடா பிரதேசத்தைச் சூழ பல கிராமங்கள் காணப்படுகின்றன. அக் கிராமங்களில் இயற்கை வளச்சிறப்புக்களை கொண்டு காணப்படுகின்ற கிராமங்களில் ஒன்றே ‘பருத்திச்சேனை’ கிராமமாகும்.இவர்களது வாழ்வியலோடு பின்னிப்பிணைந்து விளங்குவது இப்பிரதேசத்தைச் சூழ அமைந்துள்ள ஆலயங்களும், அதன் பாற்;பட்ட சடங்குகளும், திருவிழாக்களும் இவற்றோடு இணைந்து உருவாக்கம் பெறும் கலைச்செயற்பாடுகளுமே ஆகும்.
அந்தவகையில் மனதிலே கிளரும் உணர்வானது, ஆடலாக, புத்தாக்கமாக வளரும் காட்சிகளைக் தருகின்ற கலைவடிவமான கரகமும் ஒன்றாகக் காணப்படுகின்றது. இங்கு; ஆடப்பட்டு வரும் கரகமானது, கரகத்தின் ஒருவகையான விழாக்காலத்து எடுக்கும் கரகமான ‘சக்திக்கரகத்தின்’ ஒருவகையாகும். இது கும்பாட்டம்என அழைக்கப்படுகின்றது. இது முழுக்க முழுக்க தலையில் செம்பு வைத்து ஆடப்படும் செம்பு கரகம் அல்ல.
கரகம் என்றால் எல்லோருக்கும் ஒரு பார்வை தலையில் செம்பு வைத்து ஆடும் செம்பு நடனமென்று. ஆனால் அதுதான் இங்கு இல்லை. கரகம் என்பதை நினைவு கூறுவதற்காக 10 அல்லது 15 நிமிடங்களுக்கு செம்பு வைத்து செம்பாட்டம் ஆடப்படுகின்றதாகவும் அதன் பிறகு கூத்து போன்று இதிகாச புராண சரித்திரம் ஒன்றை எடுத்து இங்கு விடிய விடிய ஆடப்பட்டும் வருகின்றது.
கோவில்களில் அதன் திருவிழாக்களை முன்னிட்டு பழக்கப்படும் இக்கரகமானது,கோயில்களில் அதன் திருவிழாக்காலங்களில் அரங்கேற்றப்படாமல் வெளியிடங்களில் குறிப்பாக, வயல் வெளிகளில் அரங்கேற்றப்படுவதும் உண்டு. அத்தோடு ‘சிறப்புக்காக கோவில்களில் ஆடாமல் வெளியிடங்களில் ஆடும் பழக்கமும் உண்டு. ஏனெனில் அயல் ஊரைச்சேர்ந்தவர்களும் பார்வையிட வருவார்கள், அத்தோடு வெடி கொளுத்தல், அன்பளிப்புக்களைச் செய்தல், பெற்றோர், உறவினர்கள் தங்களுடைய பிள்ளைகளை கௌரவித்தல் எனும் விருப்பின் பொருட்டும் வெளியிடங்களிலும் ஆடப்பட்டு வருகின்றது.
;கரகத்தில் பங்குகொள்ளும் நடிகர்கள் 7-15 வயதுக்குட்பட்ட சிறுவர்களேயாவர். இதில் இருபாலரும் உள்ளடங்குவர். இதனால் இவர்களது பெற்றோர்களது விருப்பங்களும் இங்கு ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. அவர்கள் பள்ளி மாணவர்களாக இருக்கின்றபோதிலும், பெற்றோர்களினதும், ஆசிரியர்களினதும் விருப்பத்துக்கிணங்க அவர்களது கல்விச்செயற்பாடுகள் பாதிக்காத வகையில் இக்கரகம் ஆடப்பட்டு வருகின்றதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
கதைக்கு ஏற்றவகையில் பாத்திர தெரிவுகள் இடம் பெறுகின்ற போதும், ஆரம்பத்தில் செம்பு நடனத்தை சிறுமியர்களே ஆடுகின்றனர். இதற்கான செலவுகளை ஆரம்பத்தில் பழக்குபவர்களே பொறுப்பேற்பர். பின்னர் அரங்கேற்றத்தின் பொருட்டு பிள்ளைகளின் பெற்றோர்களிடமிருந்தும் பெற்றுக்கொள்வர்.கூத்துப்போன்று முறைப்படி பழகி அரங்கேற்றம் செய்யப்படுகின்றது. கிட்டத்தட்ட 10-15 களரிகள் வெளிகளில் பழகி பின்னர் சதங்கை அணி விழா செய்து, கூடி கதைத்து வட்ட களரியிலே அரங்கேற்றத்தை செய்வர்.
செம்பு வைத்து ஆடும் செம்பு கரகத்தின் பின்னர் சரித்திரம் ஒன்றுக்கான ஆடலும், பாடலும் இடம்பெறும். தென்மோடி தருக்கள், வடமோடி பல்லவிகள் போன்று கரகத்துக்குமென மெட்டுக்கள் காணப்படுகின்றன. இம் மெட்டுக்களை வைத்தே கரகத்துக்கான பாட்டுக்கள் உருவாக்கப்படுகின்றன.
மத்தள அடிக்கு ஏற்ப ஆட்டங்களும், பாடல்களும் இருப்பதுடன் அப்பாடல்களை பாட்டுக்காரரே பாடுவர். நடிகர்கள் 7-15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஆதலால் இவர்கள் வெறும் சைகை மூலமே கதையை வெளிப்படுத்துவார்.
இவ்விதமாக வருடாவருடம் அண்ணாவியார் வீரக்குட்டி ரங்கநாதன் அவர்களால் பருத்திச்சேனையில் கரகமானது முன்னெடுத்து நடாத்தப்பட்டு வருகின்றது.ஆலயங்களும, அவற்றின் திருவிழாக்களும், அவற்றை முன்னிட்டு ஊரவர் கூடுவதும், பிரிந்த உறவுகள் இணைவதும் என ஊரே கலை கட்டி நிற்கும் நேரத்தில், நாடகம், கூத்து, கரகம் என பல்கலைச்செயற்பாடுகளை முன்னெடுப்பதும் இக்கிராமத்தில் உள்ள சிறப்பான அம்சமாகும்.
ஆனாலும் இவற்றை முன்னெடுத்து வளர்ப்பதில் உண்டான பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்வைப்பது என்பதுவும் கேள்விக்குறியாகவே இருந்து வருகின்றமையும் குறிப்படத்தக்;கது. கரகத்தை பழக்கி அரங்கேற்றுவதில் அங்குள்ள கலைஞர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர் கொண்டு வருகின்றனர். கரகத்தில் பங்கு கொள்ளும் நடிகர்கள் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஆதலால் அதனை பழக்கி வரும் அண்ணாவியார் மீது பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சிறுவர்களை வைத்து தொழில் நடாத்தி சம்பாதிப்பதாக கூறி சிறுவர் பாதுகாப்பு நிதியத்தில் அண்ணாவியாருக்கு எதிராக வழக்கு தொடுத்தார்கள். அவர்களையும் அவர்களது குடும்பத்தவரையும் பல முறை விசாரணைக்கு உட்படுத்தினார்கள். இது தொடர்பாக கலாச்சார அலுவலகத்தில் முறையிடப்பட்டது. அத்தோடு பிள்ளைகளின் பெற்றோரின் அனுமதியுடன் அவர்களது கல்விச்செயற்பாடுகள் பாதிக்காத வகையில் பாடசாலைகளிலும் அனுமதி பெற்றே இச்செயற்பாட்டை அவர்கள் முன்னெடுத்து வருகின்றார்கள். தற்போது வருடா வருடம் ஒரு கரகத்தை அரங்கேற்றுவதற்கு சிறுவர் பாதுகாப்பு நிதியத்தால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்தோடு சிறுவர்களை எடுத்து பழக்குவதன் ஊடாகவும்; பல பிரச்சினைகளை எதிர் கொள்கின்றனர். கரகத்தில் இருபாலரும் கலந்து கொள்வதால் முதல் வருடம் கரகம் ஆடும் பெண் பிள்ளைகள் அடுத்த வருடத்திற்கிடையில் பருவமடைந்தால், அதற்கு பதிலாக வேறு பெண் பிள்ளைகளை எடுத்து, பழக்கி ஆட வைப்பதில் உண்டான சிரமம் பற்றியும், பருவமடைந்த பெண் பிள்ளைகள் கரகம் ஆடுவதில்லை என்றும் அவர் தெரிவித்தார். அத்தோடு அவர்களது கல்விச்செயற்பாடுகள் பாதிக்காத வகையிலும் இச் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டியிருப்பதுடன், கரகத்தை, வளர்ந்த ஆண்களைக் கொண்டு செய்வதிலும் சிரமம் எனவும் கூறுகின்றனர். ‘ஆண்கள், பெண் பாத்திரம் ஏற்று நடிக்க இணங்காத பிரச்சினை’ அவர்கள் மத்தியில் இருப்பதாக கூறினார். ஏனெனில் கூத்திலே ஆண்கள், பெண்பாத்திரங்களை ஏற்பதற்கு பெரும்பாலும் இணங்காத போது, கரகத்தில் பாத்திர சித்தரிப்பின் பொருட்டு, பெண் பாத்திரங்களை ஆண்கள் ஏற்று நடிப்பதில் பிரச்சினை உள்ளதாகவும் குறிப்பிட்டார். ஏனெனில் பெண் பாத்திரங்களை ஏற்று நடிப்பதால், சமூகத்தில் இவர்களைப் பற்றிய தவறான புரிதல்களே காரணமாக உள்ளது.
இதில் பங்கு கொள்ளும் பிள்ளைகளின் மன நிலை முதலில் ஆடும் கரகங்களை சென்று பார்வையிடுகின்ற போதே இச்சிறார்களது ஆர்வம் தூண்டப்படுகிறது. ஆடுபவர்கள் சிறுவர்கள் ஆதலால் சில சமயங்களில் கரகம் பழகும் வேளைகளில் பிழைவிடுகின்ற சந்தர்ப்பங்களில் அவர்களை தண்டிக்கின்ற போது, விட்டு விட்டு போபவர்களும் உள்ளனர். இதன் காரணமாகவே ஒன்று அல்லது இரண்டு பேரை அதிகமாக எடுத்து பழக்குகின்றோம். அத்தோடு பழகுவதில் பிடிப்பு இருந்தால் அவர்கள் பழகிக் கொள்வார்கள். அவர்கள் அலட்சியமாக இருந்தால் பழகுவதும் கடினம். அத்தோடு விடிய விடிய ஆடுவதற்கு ஏற்றவகையில் அவர்களை பழக்கி எடுப்பதும் முக்கியமாகும்.
அத்தோடு கரகத்திற்கான செலவுகளை அண்ணாவியாரே ஏற்பதாகவும், பின்னர் சதங்கை அணி, அரங்கேற்றத்தின் போது, பிள்ளைகளின் பெற்றோரிடமிருந்து பெற்றுக்கொள்வதென்பதும் நடைமுறையிலிருந்து வருகின்றது. இதற்கான செவுகள் தொடர்பான பிரச்சினைகள் இவர்கள் மத்தியில் இருப்பதை தொடர்ந்து காணமுடிகிறது. இருப்பினும் பிற கோயில்கள், வெளியிடங்களில் அரங்கேற்றம் செய்யும் போது ஒரு குறிப்பிட்ட தொகையினை பெற்றுக்கொள்வதாகவும் அவை சாப்பாடு, உடுப்புக் கட்டுதல், சதங்கை என்பனவுக்காகவும் செலவாகி விடுகின்றது.
கரகத்தில் நடிகர்கள் சிறுவர்களாக இருக்கின்ற போது, அரங்கேற்றத்தில் அவர்களது மனது புண்படும் வகையில் சில சம்பவங்களை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. குறிப்பாக அரங்கேற்றத்தின் போது, பெற்றோர், உறவினர்கள் தங்களது பிள்ளைகளை கௌரவிக்கும் பொருட்டு மலர் மாலைகள், காசு மாலைகள், என பலவற்றை போட்டு கௌரவிப்பர். இருப்பினும் சில பிள்ளைகள் கௌரவிக்கப்படாத பட்சத்தில் அவர்களை அறியாமலே அவர்களது மனம் புண்பட்டு நின்றதை அவதானிக்க முடிந்தது.
இவ்விதமாக பல பிரச்சினைகள் இருக்கின்ற போதும், பல தடைகளையும் சவால்களையும் எதிர்கொண்டு பாரம்பரிய கலைகள் அழிந்தும், புதிய பரிமாணங்களையும் எடுத்து வரும் இந்நிலையில் பருத்திச்சேனையில் கரகமானது சிறப்பாக அரங்கேறி வருகின்றமையை அவதானிக்க முடிகிறது.
பருத்திச்சேனை கிராமத்தில் கலை உருவாக்கச் செயற்பாடுகளில் கூத்து, நாடகம் போன்று கரகமும் முக்கியத்துவமும், தனித்துவமும் பெற்று சிறப்புற்று விளங்குவதை நாம் கண்டு கொள்ள முடியும்.