குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
யாழ்.நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தை சுற்றி வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களை இராணுவ புலனாய்வாளர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.
நினைவிடம் புனரமைக்கப்படவுள்ள நிலையில் முதற்கட்டமாக நினைவிடத்தை சுற்றி பாதுகாப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் யாழ்.மாநகர சபையால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்நிலையில் நேற்றையதினம் மாநகர சபை பணியாளர்கள் வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை அவ்விடத்திற்கு சிவில் உடையில் சென்றவர்கள் தம்மை இராணுவ புலனாய்வாளர்கள் என அறிமுகப்படுத்திக்கொண்டு, பணியாளர்களை அச்சுறுத்தியுள்ளனர்.
“வெளியில் சந்தோஷமா வாழ ஆசையில்லையா?”, “பருப்பும் சோறும் சாப்பிட ஆசையா?” என பணியாளர்களை கேட்டு அச்சுறுத்தியுள்ளனர்.
அதனால் அச்சமடைந்த பணியாளர்கள், வேலி அடைக்கும் வேலையை கைவிட்டு அலுவலகம் திரும்பியவுடன், தாம் அந்த பணியில் ஈடுபடபோவதில்லை என தெரிவித்துள்ளனர்.
அதனால், வேலி அடைக்கும் மிகுதி பணிகளை வெளியில் இருந்து தற்காலிகமாக வேலைக்கு பணியாளர்களை அமர்த்தி யாழ்.மாநகரசபை பூரணப்படுத்தியது.