யுத்தம் இடம்பெற்ற போது வெளிநாடுகளுக்கு புகலிடம் பெற்றுச் சென்றவர்களில் 242 பேர் இலங்கையில் மீண்டும் பிரஜாவுரிமை பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றி;ன் மூலம் வெளிவிவகார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சால் ஒருங்கிணைக்கப்பட்ட இரண்டாவது ஒருங்கிணைந்த நடமாடும் சேவை மன்னார் நகரசபை மண்டபத்தில் கடந்த 12-13 ஆம் திகதிகளில் நடைபெற்றது. இந்த நடமாடும் சேவையின் நோக்கமானது யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து இலங்கைக்கு திரும்பி வந்துள்ளவர்களின் தேவைகள் தொடர்பில் பரிகாரம் காண்பதேயாகும்.
இந்த ஒருங்கிணைந்த நடமாடும் சேவையினூடாக பிரஜாவுரிமைக்கான 242 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் 59 பிறப்பு சான்றிதழ்கள் விநியோகிக்கப்பட்டதுடன் பிரஜாவுரிமை மற்றும் பிறப்பு சான்றிதழ்கள் தொடர்பான ஆலோசனை மற்றும் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, பதிவாளர் நாயகத்தின் திணைக்களம் மற்றும் குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் பிரசாவுரிமை பிரிவு ஆகியவற்றின் உத்தியோகத்தர்கள் இந்த ஒருங்கிணைந்த நடமாடும் சேவையை நடாத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது