கேரளாவில் கனமழை நீடிப்பதால் ஓகஸ்ட் 28-ம் திகதிவரை பாடசாலை கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக கேரள மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருவதனால் அங்குள்ள அணைகளும், ஏரிகளும் நிரம்பி வழிவதனால் கேரளாவின் அனைத்து மாவட்டங்களும் வெள்ளத்தில் முழ்கியுள்ளன.
மேலும் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100ஐ நெருங்கியுள்ள நிலையில் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளம் காரணமாக பல்வேறு பகுதிகளில் வீதிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதுடன் நிலச்சரிவு அபாயமும் உள்ளது.
இதன் காரணமாக காடசாலை மற்றும் கல்லூரிகளுக்கு வரும் 28-ம் திகதி வரை விடுமுறை விடப்பட்டிருப்பதாக கேரள அரசு அறிவித்துள்ளது. இந்த நாட்களில் நடைபெறுவதாக இருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாகவும், தேர்வுகளுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.