ஊடகவியலாளர் கீத் நொயர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து தனக்கு எதுவும் ஞாபகம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.சிரேஷ்ட ஊடகவியலாளர் கீத் நோயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று (17.08.18) முன்னாள் ஜனாதிபதியிடம் மூன்று மணித்தியாலங்கள் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.கொழும்பு விஜேராமவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இதுதொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்தநிலையில் விசாரணையின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட மஹிந்த ராஜபக்ச, ஐவரடங்கிய குற்றபுலனாய்வுப் பிரிவினர் தன்னிடம் விசாரணைகளை மேற்கொண்டனர், ஊடகவியலாளர் கீத் நொயர் தொடர்பில் விசாரித்தார்கள் அந்த சம்பவம் தொடர்பில் தற்போது தனக்கு நினைவில் இல்லை என குறிப்பிட்டார். அத்துடன் இவ்வாறான செயற்பாடுகள் அரசியல் தேவைக்கருதியே மேற்கொள்ளப்படுகின்றன.
அரசாங்கத்தின் பழிவாங்கும் நடவடிக்கையின் ஒரு அங்கமே எனக் குறிப்பட்ட மகிந்த, தற்போதைய கருஜயசூரிய தனக்கு இரவு 11.20 அளவில் தொலைபேசி அழைப்பை எடுத்ததாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால் தனக்கு அது தொடர்பில் நினைவில்லை எனவும், இவ்வாறான விசாரணைகளுக்கு முகம் கொடுப்பது தற்போது வாடிக்கையாகிவிட்டது எனவும் தெரிவித்துள்ளார்.
இதே வேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் வாக்குமூலம் பெறப்பட்டமைக்கு மினுவாங்கொட பிரதேச சபை தாமரை மொட்டு உறுப்பினர்கள் கறுப்பு பட்டி அணிந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசாங்கத்திற்கு மூன்றாண்டுகள் பூர்த்தியாகின்ற சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதியிடம் விசாரணை செய்வது அரசியல் தந்திரம் என்று அந்த உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.