குற்றப் புலனாய்வுப் பிரிவு, இன்று இரண்டரை மணி நேரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் விசாரணை நடத்தியமை, அவர் மீது சேறு பூசுவதற்கான நடவடிக்கை என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல்.பிரிஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று இலங்கை மன்றக்கல்லூரியில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், “மக்கள் நேரடியாக அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் அரசாங்கம் தற்போது அடக்குமுறை, மோசடி மற்றும் மக்களின் உரிமைகளை எப்போதுமில்லாதவாறு மீறிச் செயற்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக குற்றப்புலனாய்வுப் பிரிவு அரசாங்கத்தின் கையாளாகச் செயற்படுகிறது. குறுகிய அரசியல் நோக்கத்திற்காக ராஜபக்ஷ குடும்பத்தினர் மற்றும் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் அரசாங்கம் அச்சமடைந்துள்ளது. அதனாலேயே அவர்களுக்கு எதிராக இவ்வாறான கெடுபிடிகளை முன்னெடுத்து வருகிறது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்