பொஸிற்றிவ்” பொன்னம்பலம்…
வெய்யில் ஏற முன்னம் யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரிக்குப் போட்டு வந்தாச்சு. இல்லாட்டி பஸ்ஸுக்கு நிண்ட கழைப்போடை வெய்யிலுக்கையும் அம்பிட்டிருந்தால் பித்தம் கிளறித் தலையிடி வந்திருக்கும். பிறகு தலையைச் சுத்து, சத்தி எண்டு வந்து பாட்டிலை போட்டிருக்கும். அதை நினைக்கப் பயமாக்கிடக்கு.
அது சரி நான் சொல்ல வந்ததை என்னெண்டு கேக்கேல்லை! ஏன் நான் ஆஸ்பத்திரிக்குப் போன்னான் எண்டும் கேக்கேல்லை! உவன் சந்திரன்ரை மகள் ஆஸ்பத்திரியிலை அக்சிடன்ற் வாட்டிலை இருக்கிறாள். குதிக்கால் பிரண்டு நிமித்த ஒப்பிரேஷன் செய்து ஆறு தையல் போட்டபடி. கட்டோடை பெடிச்சியைப் பாக்கப் பாவமாக்கிடக்கு. மோட்டுப் பெடிச்சி. அவள் செய்ததும் பிழைதானே. மச்சாள்காரி சொல்லிப்போட்டாள் எண்டதுக்காகத் தனக்கு ஒவ்வாததைச் செய்யிறதே?
போன கிழமை உவளைப் பொம்பிளை பாக்க ஒரு பகுதி மட்டுவிலிலை இருந்து வந்தவை. சாதகமும் பொருத்தம். பெடிச்சியும் பளிச்செண்டு நல்ல ‘மா’ வெள்ளை. ஆனால் மாப்பிளையின்ரை தங்கைக்காரி சொன்னாளாம் பொம்பிளை கொஞ்சம் உயரக் குறைவெண்டு. அதாலை வீட்டை போய் ஒருக்காக் கதைச்சுப்போட்டுச் சொல்லுறம் எண்டு சொல்லிப்போட்டுப் போனவையாம். பதிலைக் காணேல்லை எண்டு உவள் சந்திரன்ரை மகள் எடுத்து ஜேர்மனியிலை உள்ள தன்ரை தமையனிட்டை ரெலிபோனிலை அழுதவளாம். உடனை அவன்ரை பெண்சாதி – அதுதான் சந்திரன்ரை மருமேள் ரெலிபோனைப் பறிச்சு, “ ஏன் இவ்வளவு நாளும் அதுக்கெண்டு ஒண்டுஞ் சேய்யாமல் இருந்தனியள்? போன முறையும் நான் ஸ்ரீ லங்காவிலை நிக்கேக்கை படிச்சுப் படிச்சுச் சொன்னான். குதிக்கால் செருப்பு வாங்கிப் போட்டு நடந்து பழகும் எண்டு. நீர் என்ரை சொல்லைக் கேக்கேல்லை. இப்ப பாத்தீரே என்ன நடந்ததெண்டு? பறவாயில்லை இன்னும் ஒண்டும் குடி முழுகிப்போகேல்லை. அப்பாவைக் கூட்டிக் கொண்டு போய் உடனை வாங்கும். வீட்டிலை ஒண்டுக்கு இரண்டு ஸ்கூட்டர் வாங்கித் தந்திருக்கிறம். அதிலை போய் வாங்க உங்களுக்குப் பஞ்சியாக் கிடக்கு என்ன?” எண்டிட்டு மச்சாள்காரி ரெலிபோனை வச்சிட்டாவாம்.
சந்திரனுக்கு இதைச் சொன்ன உடனை சந்திரன் சொன்னானாம், “அண்ணிக்காரியின்ரை சொல்லை அப்ப கேட்டிருந்தால் உந்தச் சம்பந்தம் வடிவா ஒப்பேறி இருக்கும். ஒரு குதிக்கால் செருப்பாலை ஒரு பாங்கற்றை சம்பந்தத்தை விட்டிட்டம். சரி இனியாவது புத்தியோடை நடப்பம். சரி வெளிக்கிடு ரவுணுக்குப் போயிட்டு வருவம் எண்டு சந்திரன் மேளைக் கூட்டிக் கொண்டுபோய் நாலைஞ்சு கடையா ஏறி இறங்கினவனாம். ஏனெண்டால் எல்லாச் சீலைக்கும் பொதுவாப் போடக் கூடியமாதிரி ஒண்டை வாங்க வேணுமெண்டு பெடிச்சி பிடிவாதமா நிண்டவளாம். கடைசியா ஒரு கடையிலைதான் இரண்டு இஞ்சி உயரமான செருப்பு ஒரு சோடியை வாங்கிக் கொண்டு வந்தவையாம். . பெடிச்சி அதை ஒரு கிழமையாப் போட்டுப் பழகினாப் பிறகு ஒரு நாள் பாங்குக்கும் போகேக்கை போட்டுக் கொண்டு போயிருக்கிறாள். போயிட்டுத் திரும்பி வந்து ஸ்கூட்டரை எடுக்கேக்கை கானுக்கை கிடந்த கல்லைப் பெடிச்சி கவனிக்கேல்லை. குதிக்கால் பக்கம் கல்லிலை பட்டுப் பிரட்டி விட்டிட்டுது. பின்பக்கமா விழுந்தாப்போலை கால் “டானா” மாதிரித் திரும்பிவிட்டுது. செருப்பும் அறுந்து போச்சுது. ஒரு டாக்குத்தருக்குப் படிக்கிற பெடி பின்னாலை வந்தபடியாலை அவளின்ரை தலை றோட்டிலை அடிகுண்ணாமல் அந்தப் பெடி பிடிச்சுப்போட்டான். அவன்தான் கொண்டு போய் ஆஸ்பத்திரியிலை சேத்துப்போட்டுச் சந்திரனுக்கும் தகவல் குடுத்தவன். பெடி நல்லவனாக் கிடக்கு. ஏனெண்டால் தினமும் வந்து சந்திரன்ரை பெட்டையைப் பாக்கிறனாம். டாக்குத்தர்மாரோடை கதைக்கிறானாம். “அங்கிள் நீங்கள் கஷ்டப்பட்டு வராதையுங்கோ நான் பாத்துக் கொள்ளுறன்” எண்டு சொல்லி சந்திரன்ரை பெட்டைக்கு ஒரே அப்பிளாலையும் ,தோடம்பழத்தாலையும் அபிஷேகமாம். நான் போய் நிக்கேக்கையும் அவனைக் கண்டனான். அப்ப சந்திரன் அங்கை இல்லை. அந்தப் பெடிதான் அவளுக்குத் தண்ணி, வெந்நி குடுத்தவன். அவளும் கால் மடங்கிப் போச்சுதெண்ட துக்கமும் இல்லாமல் சந்தோஷமா இருக்கிறதாத்தான் எனக்குத் தெரியிது. நான் நினைக்கிறன் சந்திரனுக்கு ஒரு தலையிடி நீங்கிச்சுதெண்டு. பெடிச்சீன்ரை கால் எப்பிடியும் சரிவந்திடும் என்ன?
சந்திரன்ரை பெடிச்சீன்ரை விசியத்திலை கால் மடங்கினாலும் வெற்றி எண்டு தான் சொல்லவேணும். ஆனால் எல்லாருக்கும் உப்பிடி ஒரு சான்ஸ் வருமோ? சந்திரன்ரை பெடிச்சியைக் கட்டப்போறவனுக்குப் பொல்லாலை அடிச்ச மாதிரிச் சொத்தும் காசும் எல்லே சீதனமாக் கிடக்கு. சந்திரனிட்டை என்ன இல்லை? இதைக் கேட்டிட்டு ஜேர்மனியிலை சந்திரன்ரை பெடி தன்ரை பெண்சாதியோடை சண்டையாம். “சும்மா நிண்டவளைக் குதிக்கால் செருப்பை வாங்கி நடந்து பழகு எண்டு சொல்லிக் கடைசியிலை தங்கச்சியை நொண்டி ஆக்கினதுதான் மிச் சமெண்டு.” அதுக்கு அவள் சொல்லுறாளாம் “போன முறை ஸ்ரீ லங்காவிலை நிக்கேக்கை உங்கடை தங்கச்சியின்ரை சாதகத்தைப் கொண்டுபோய்ப் பாத்தனான். அவளுக்குக் கிரக தோஷம் இருக்காம். அது கழிஞ்சால்தான் கழுத்திலை தாலி ஏறுமாம்” எண்டு சாத்திரி பலன் சொன்னவர். “அப்ப குதிக்கால் பிரண்டபடியாலை கிரகதோஷம் விலகிவிட்டுது.இனி கலியாணஞ் சரிவருமாம்” எண்டு அவள் அடிச்சுச் சொல்லுறாளாம். டொக்டர் பெடியின்ரை கதையை ஆரும் இன்னும் அவைக்குச் சொல்லேல்லையாம். சொன்னால் மேன்காரன் சிலவேளை தன்னிலை பாய்வனோ? எண்டு சந்திரன் பயப்பிடுறான்.
சந்திரனுக்கு , “இப்ப உள்ளவைக்கு நாட்டு நடப்பு விளங்குமோ? கலியாணம் ஒண்டை ஒப்பேற்றிறதிலை இருக்கிற கயிட்டப்பாடு தெரியுமோ? நல்ல முயற்சியுள்ள, குடும்பத்தை அக்கறையோடை தாங்கிற ஒருத்தன் வந்து அமையிறதுக்குக் குடுத்து வைக்க வேணும்.” எண்டு நான் சொன்னன். அதுக்குச் சந்திரன் சொல்லுறான் பொன்னம்பலண்ணை எனக்கு உது விளங்கிது. ஆனால் என்ரை பெடியன் “ உந்த டாக்குத்தர் பெடி ஆர் எவரெண்டு விசாரிச்சனீங்களோ? அவன்ரை பின்னணி என்ன அப்பா?” எண்டு கட்டாயம் கேப்பன். அப்பிடி அவன் கேட்டால், நான் என்னத்தைச் சொல்லுறது? அவனுக்கு உது பிடியாட்டில் தண்ணியைப் போட்டிட்டு விடிய விடிய என்னை முழிக்க வைச்சுக் கேளாத கேள்வி கேட்டே சாக்காட்டிப் போடுவன். அதுக்கெல்லே பயமாக்கிடக்கு.” எண்டு சந்திரன் சொல்லுறான். சந்திரன்ரை இக்கட்டும் எங்களுக்கு நல்லா விளங்கிது. ஆனால் உதெல்லாத்துக்கும் முதல் சந்திரன் தன்ரை பெடிச்சி “சொல்வழி கேப்பளோ ? பிடிச்சவள் விடுவளோ?எண்டு தெரியாது,” எண்டு சந்திரன் நல்லாப் பயப்பிடுறான்.
உதை எப்பிடிச் சமாளிக்கிறதெண்டு நான் சந்திரனுக்கு ஒரு உத்தி சொல்லிக் குடுத்தன். “சந்திரன்! குதிக்கால் செருப்பு வாங்க ஐடியா குடுத்தது ஆர்? அவளின்ரை தமையன் பெண்சாதி. அது தான் உன்ரை மேன்ரை பெடிச்சி எல்லே! அவள் உனக்கு மருமோள். என்ன? பேசாமல் அவளோடை உன்ரை மேளைக் கதைச்சு விசியத்தைக் கக்கப்பண்ணு. அவள் தன்ரை புருசனைச் சமாளிக்கட்டும். வேற வழியில்லை. முள்ளை முள்ளாலைதான் எடுக்க வேணும். ” எண்டு புத்தி சொல்லிக் குடுத்து இருக்கிறன்.
ஒரு கட்டைப் பொம்பிளைக்கு இரண்டு இஞ்சி உயரமுள்ள ஒரு குதிக்கால் செருப்பு வாங்கிக்குடுத்து அவளைப் பாக்கிற பெடியை அவள் உயரம் எண்டு நம்பப் பண்ணுறது அவ்வளவுக்குச் சரி எண்டு எனக்குப் படேல்லை. அதைப் பாத்துப் பெடிச்சி உயரம் எண்டு நம்பி அவளைக் கட்டுறவன் நல்ல விளப்பமுள்ளவனா இருப்பன் எண்டு நினைக்கிறியளே? நல்லகாலம் , உவன் பாங்கர் திரும்பி வராதது. நாங்கள் கயிட்டத்திலை இருக்கேக்கை உதவுறவன்தான் உண்மையான விசுவாசி. ஆனபடியாலை டொக்டரை விடாமல் பிடி” எண்டு சந்திரனிட்டைச் சொன்னன். பிறகு நான் சந்திரனைச் சந்திக்கேல்லை. ஆனபடியாலை அதுக்கங்காலை என்ன நடந்ததெண்டதுக்கு என்னட்டை விபரமும் இல்லை
- “பொஸிற்றிவ்” பொன்னம்பலம்”