அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் முன்னாள் பிரசார உதவியாளருக்கு 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டிரம்ப் வெற்றி பெறவும், ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் இறங்கிய ஹிலாரி கிளிண்டன் தோல்வி அடையவும் ரஸ்யா நேரடியாக தலையிட்டதென தெரிவிக்கப்படும் முறைப்பாடுகள் குறித்து சிறப்பு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதில், டிரம்பின் பிரசார உதவியாளராக செயல்பட்ட ஜோர்ஜ் பப்படோபவுலஸ்( George Papadopoulos) ரஸ்யாவுடனான தனது தொடர்புகள் பற்றி மத்திய புலனாய்வு படை நடத்திய விசாரணையின்போது பொய் கூறியதாக ஒப்புக்கொண்டுள்ளதனையடுத்து அவருக்கு 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்குமாறு விசாரணைக்குழு நீதிமன்றிடம் சிபாரிசு செய்துள்ளது.
ஜோர்ஜ் விசாரணையை கெடுக்கும் நோக்கத்துடன்தான் உண்மைகளை மறைத்து உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தண்டனை விவரம் அடுத்த மாதம் 7ம்திகதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது