எகிப்தில் இணையத்தை கட்டுப்படுத்தும் ஒரு புதிய சட்டம் ஒன்றில் அந்நாட்டு பிரதமர் அப்டெல் பற்றா அல்- சிசி (Abdel-Fattah aL-Sisi) கையெழுத்திட்டுள்ளார். இணைய வழி குற்றம் எனும் இச்சட்டத்தின்படி தேச பாதுகாப்பு அல்லது பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான வலைதளங்கள் முடக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இது போன்ற வலைதளங்களை யாராவது நடத்தி வந்தாலோ அல்லது உதவினாலும் அவர் சிறை தண்டனை அல்லது அபராதம் கட்ட வேண்டியேற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்புதிய சட்டமானது அந்நாட்டின் நிலையற்றத்தன்மை மற்றும் பயங்கரவாதம் போன்றவற்றை எதிர்கொள்ள உதவும் எனத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள மனித உரிமைகள் அமைப்புக்கள் அரசு அந்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் எதிரிகளையும் நசுக்கவே இந்நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளன.
எகிப்தில் வீதியில் இறங்கி போராட்டம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இணையம்தான் அந்நாட்டு மக்களுக்கு தங்களின் கருத்துக்களையும் எதிர்ப்பையும் பதிவு செய்ய உதவும் ஒரே களமாக காணப்பட்ட நிலையில் இச்சட்டம் அமுலுக்கு வந்துள்ளது.
எகிப்தில் இப்புதியச் சட்டம் கையெழுத்தாவதற்கு முன்னதாகவே 500 வலைதளங்கள் முடக்கப்பட்டுவிட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.