குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் சிலரை ஆசை வார்த்தைகள் கூறி இராணுவத்தினர் தம் வசப்படுத்தி வைத்துள்ளார்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண முதலமைச்சருக்கும் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று திங்கட்கிழமை கைதடியில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது.
குறித்த சந்திப்பின் முடிவில், சந்திப்பு தொடர்பில் முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
என்ன வழியில் சமாதானம் ஏற்படுத்தலாம் என்பதனை அறிய வந்திருந்தார்கள். வந்த பலரும் பல விதமானா பாண்டித்தியத்தை பெற்றவர்கள் அதன் அடிப்படையில் கேள்விகளை கேட்டார்கள் . அதற்கு நாம் பதிலளித்தோம்.
அதில் முக்கியமாக எம்மிடத்தில் நல்லிணக்கத்தையும் நல்லெண்ணத்தையும் ஏற்படுத்த வேண்டும் ஆயின் மக்களின் மனதில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும் வடக்கு கிழக்கை தமது ஆதிகத்தின் கீழ் வைத்திருக்க தெற்கில் உள்ளவர்கள் நினைத்தால் ஒரு போதும் நல்லிணக்கம் சாத்தியமாகாது. வடக்கு கிழக்கு மக்களை சமனாக மதித்தால் தான் நல்லிணக்கம் ஏற்படும் என அவர்களிடம் கூறினேன். அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.அத்துடன் இராணுவம் தொடர்ந்து இருப்பது , மகாவலி நீரை தருவதாக கூறி தெற்கில் இருந்து மக்களை கொண்டு வந்து குடியேற்றியமை தொடர்பிலும் எடுத்து கூறி இருந்தேன்.
அதேவேளை முன்னாள் போராளிகள் பற்றி கேட்டார்கள். அதன் போது இரண்டு விடயங்களை கூறினேன். ஒன்று பல முன்னாள் போராளிகள் சிறையில் இருந்த காலத்தில் இராணுவத்தினர் அவர்களை விரைவாக விடுதலை செய்வதாகவும் பல ஆசை வார்த்தைகளை கூறியும் அவர்களை வசப்படுத்தினார்கள்.
அதன் மூலம் சிலர் இராணுவத்துடன் சேர்ந்து இயங்குகின்றார்கள். அவர்கள் தற்போது இராணுவத்தினரின் கீழே இயங்கு கின்றார்கள் அவர்கள் வெளியே வர முயற்சித்தாலும் இராணுவத்தினர் அதற்கு அனுமதிக்கின்றார்கள் இல்லை.
அதேவேளை பல முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைக்கப்பட்டாலும் சமூகத்தில் வாழ்பவர்கள் அவர்களை தம்முடன் இணைத்து பயணிக்க அச்சப்படுகின்றார்கள். முன்னாள் போராளிகளுடன் இணைந்தால் தமக்கும் ஏதாவது பிரச்சனைகள் வருமோ என பயப்படுகின்றார்கள். அதனால் பலர் அவர்களை தவிர்ப்பது தொடர்பில் எடுத்து காட்டினேன்.
அவ்வாறான முன்னாள் போராளிகளை சமூக மயப்படுத்துவது தொடர்பில் நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பில் எடுத்து கூறினேன் என தெரிவித்தார்.