தமிழ்நாடு கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 200 வீடுகள் ஒரே நாளில் இடித்து அகற்றப்பட்டுள்ளன. பண்ருட்டியில் 10 ஏக்கர் பரப்பளவிலான செட்டிப்பட்டறை ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 200 வீடுகளை எதிர்வரும் 24-ம் திகதிக்குள் அகற்றுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, வீடுகளை விட்டு வெளியேறுமாறு குறித்த வீடகளில் வசித்த மக்களுக்கு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டபோதும் மக்கள் வெளியேறவில்லை.
இதனையடுத்து நேற்றையதினம் செட்டிப்பட்டறை ஏரிக்கு சென்ற அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் வீடுகளை விட்டு வெளியே வருமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்த போதும் பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதிமொழி வழங்கியதுடன் பெருமளவிலான காவல்துறையினரின் பாதுகர்புடன் 3 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அந்த ஏரியில் கட்டப்பட்டிருந்த 200 ஆக்கிரமிப்பு வீடுகளும் ஒரே நாளில் இடித்து அகற்றப்பட்டுள்ளன.