ஐநா முன்னாள் பொதுச்செயலாளர் கோபி அன்னான் மறைவையடுத்து ஜெனீவா சென்று அவரது குடும்பத்தினரை சந்திப்பதற்காக முன்னாள் அமைச்சர் சசி தரூருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள அவரது கணவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூரிற்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் பிணை வழங்கியிருந்தது.
இதனையடுத்து அவர் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அதனை ஏற்ற நீதிமன்றம், அமெரிக்கா, கனடா, ஜெர்மனி உள்ளிட்ட 5 நாடுகளுக்கு செல்ல அனுமதி வழங்கியது. இந்தநிலையில் தற்போது ஜெர்மனியில் உள்ள அவர் ஐநா முன்னாள் பொதுச்செயலாளர் கோபி அன்னான் மறைவையடுத்து அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக ஜெனீவா செல்வதற்கு அனுமதி கேட்டு டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்றையதினம் நடைபெற்ற நிலையில் சசி தரூர் ஜெனீவா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கு ஓகஸ்ட் 20 மற்றும் 21ஆகிய திகதிகளில் பயணம் மேற்கொள்ள நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.