அவுஸ்ரேலிய ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள லிபரல் கட்சி தலைவராக பிரதமர் மல்கம் டர்ன்புல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவுஸ்ரேலியாவில் லிபரல் கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் கூட்டணி கட்சிகளின் செல்வாக்கு வெகுவாக சரிந்துள்ளதாகவும், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் தொழிலாளர்கள் கட்சியின் கை ஓங்கி வருவதாகவும் கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், லிபரல் கட்சியின் தலைவர் பதவிக்கு பிரதமர் மல்கம் டர்ன்புல் போட்டியிட தீர்மானித்தார். அவரை எதிர்த்து உள்துறை அமைச்சரும், முன்னாள் உளவுத்துறை உயரதிகாரியுமான பீட்டர் டட்டன் களமிறங்கினார். மல்கம் டர்ன்புல்-லை தோற்கடிக்க முன்னாள் பிரதமர் டோனி அபாட் முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தேர்தலில் 48 வாக்குகளை பெற்ற மல்கம் டர்ன்புல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரை எதிர்த்து போட்டியிட்ட பீட்டர் டட்டன் 35 வாக்குகளை பெற்றார்.
மீண்டும் துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வெளியுறவுத்துறை அமைச்சர் ஜூலி பிஷப்-பை எதிர்த்து எவரும் போட்டியிடாததால் அவரே மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.