முன்னாள் பிரதி அமைச்சரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரனின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் நிலையியற் கட்டளை பிரகாரம் நடவடிக்கை எடுக்க முடியும் என சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அறிவித்துள்ளார்.
எனினும் சட்டமா அதிபரின் விளக்கத்தில் “நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் கருத்து அரசியலமைப்புக்கு முரணானதா என்பது தொடர்பில் எந்தவொரு குறிப்பும் இடப்படவில்லை.” அதனால் இது தொடர்பிலும் சட்டமா அதிபரின் முடிவினையும் உடன் அறிவிக்குமாறும் சபாநாயகர் கோரியுள்ளார். இது தொடர்பான அறிவிப்பினை சட்டமா அதிபர் விரைவில் முன்வைக்க கூடும் என எதிர்பார்ப்பதாக சபாநாயகர் அலுவலகம் குறிப்பிட்டது.
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு மீள் உருவாக வேண்டும் என யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் முன்னாள் பிரதி அமைச்சரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து பெரும் பரபரப்புக்கும், எதிர்ப்புக்கும் உள்ளானது. குறிப்பாக தெற்கில் பாரிய எதிர்ப்புகள் வெளிக்கிழம்பின. இந்த கருத்து தொடர்பில் பாராளுமன்றத்திலும் சர்ச்சையான நிலைமை ஏற்பட்டதை அடுத்து இந்த கருத்து தொடர்பாக காவற்துறை விசாரணை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.