யாழ்ப்பாணம் வலி.தெற்குப் பிரதேச சபையின், ஐக்கியதேசியக் கட்சியை செர்ந்த பெண் உறுப்பினர் ஒருவரின் வீட்டில் யாருமில்லாத வேளையில் உட்புகுந்த கொள்ளையர்கள் பணம் மற்றும் பெறுமதியான பொருட்களைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
யாழ்.குப்பிளான் வடக்குப் பகுதியிலுள்ள இவரது வீட்டில், பகல் வேளையில் யாருமில்லாத வேளையில் வீட்டின் கூரை ஓட்டை உடைத்து உள்ளே இறங்கிய கொள்ளையர்கள் பணம் மற்றும் பெறுமதியான பொருட்களைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். இன்று (21.08.18) இடம்பெற்ற இந்தத் துணிகரக் கொள்ளைச் சம்பவம் குறித்து, வலி.தெற்குப் பிரதேச சபையின் பெண் உறுப்பினரின் கணவரான சி.கணேசகுமார் கருத்துத் தெரிவிக்கையில்,
எனது பிள்ளைகளை உறவினர்களின் வீட்டில் விட்டுவிட்டு பகல் 11 மணிக்கு யாழ்.நகரில் பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக எனது மனைவியையும் அழைத்துக் கொண்டு சென்றேன்.
இந்தநிலையில் பிற்பகல் 01 மணியளவில் மீண்டும் வீட்டிற்கு வருகை தந்து கேற்றைத் திறந்து பார்த்த போது வீடு உடைத்துத் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. 55 ஆயிரம் ரூபா பணம், பெறுமதியான புதிய கைத்தொலைபேசி, இரண்டு கைக்கடிகாரம், பத்தாயிரம் ரூபா பெறுமதியான கவரிங் நகைகள் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன.
வீட்டிற்கு அருகில் குடியிருப்புக்கள் பல காணப்படும் நிலையில் வழமையாக நாங்கள் வெளியே சென்று வருவது வழமை. ஆனால், இன்றுதான் எதிர்பாராத விதமாக இவ்வாறான கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. பெறுமதியான பொருட்களை எதிர்பார்த்து, வீடு முழுவதும் தேடுதல் நடந்தமைக்கான தடயங்கள் காணப்படுகின்றன எனத் தெரிவித்தார்.
இதேவேளை, இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரால் சுன்னாகம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் சுன்னாகம் காவல் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் சுன்னாகம் காவற்துறையினர் இன்று பிற்பகல் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.