“தமது உரிமைகளையும், அரசியல் பலத்தையும் எதிர்வரும் மாகாணசபை தேர்தலின் மூலமாக காட்டுவோம் என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சி தெரிவித்துள்ளது.
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கருத்தை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்த அக்கட்சி, தம்மிடம் விதண்டாவாதம் பேசிக்கொண்டிருக்கும் அனைவருக்கும் தமது பதிலை மாகாண சபைத் தேர்தலில் வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இராணுவத்துடன் இணைந்து முன்னாள் போராளிகள் தமிழர்களை காட்டிக்கொடுப்பதாக வட மாகாண முதலமைச்சர் கருத்தொன்றை அண்மையில் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் சிவகுமார் ரகுநாத் இன்று ஊடகங்களுக்கு தமது கருத்தை தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
முன்னாள் போராளிகள் இராணுவத்துடன் சேர்ந்து தமிழ் சமுதாயத்தை காட்டிக்கொடுத்து செயற்படுவதாக இருந்தால், ஏன் வடக்கு முதல்வருக்கு இராணுவத்தின் மூலம் அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.