கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பை பாதுகாக்கவும் பலத்தினை நிரூபிக்கவும், அனைத்து தமிழ் கட்சிகளும் இணைந்து பொதுச் சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் கோபாலகிருஸ்ணன் தலைமையில் இராசமாணிக்கம் மண்டபத்தில் இக் கலந்துரையாடல் இன்று இடம்பெற்றுள்ளது.
கிழக்கு மாகாண தமிழர் ஒன்றியத்தினரால் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கலந்துரையாடலில் வடக்கு கிழக்கின் பல்வேறு தமிழ் கட்சிளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். தேர்தல் காலத்தில் தமிழர்களின் பலத்தினை நிலை நிறுத்தும் பொருட்டு இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் பல்வேறு கட்சிகளுடனும் கிழக்கு மாகாண தமிழர் ஒன்றியம் தனித் தனியாக பேச்சு நடத்தியுள்ளது.
இதன்போது, இம் முயற்சி, வடக்கு கிழக்கு இணைப்பை பாதிக்குமா? இதற்கு தலைமை வகிப்பது யார்? எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது? கிழக்கு மாகாண தமிழர் ஒன்றியம் தேர்தல்களில் போட்டியிடுமா முதலிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. பல கட்சிகள் இதற்கு ஆதரவளித்துள்ளதாகவும் சில கட்சிகள் தலைமைப்பீடத்துடன் கலந்தாலோசித்த பின்னரே தெரியப்படுத்தியதாகவும் கூறியதாக தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி. துரைசிங்கம் கூறினார்.