ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக பொன்னர் சங்கர் கூத்தினை தொடர் செயற்பாடாக ஆய்வினை மேற்கொண்டு ஆய்வுத்துறையில் சிறந்த இடத்தினை தன்னகத்தே கொண்டவராக கனடா நாட்டினைச் சேர்ந்த பேராசிரியர் பிருந்தா பெக் அவர்கள் காணப்படுகின்றார். அவரது நீண்ட ஆய்வு வரலாற்றினூடாக ஆய்வுத்துறையில் தனக்கென ஒரு இடத்தினை பிடித்துள்ளார். சிறந்த ஆய்வாளராக ஒருவர் திகழவேண்டுமாயின் ஆர்வம், விடயமுயற்சி, கடுமையான உழைப்பு, அஞ்சா நெஞ்சம், தோல்வியினை கண்டு தளராத மனவலிமை போன்ற பல விடயங்கள் அவரிடத்தில் விருத்தி பெறவேண்டும். ஏனெனின் உண்மையைத்தேடும் பணியே ஆய்வு என்பதால் அத்தேடலுக்கு வழிகோலுபவை மேற்குறித்தவாறன பண்புகளே. பேராசிரியர் பிருந்தா பெக் ஆய்வுத்துறையில்; கொண்டுள்ள பாண்டித்தியமும் தேடலும், தொடர் செயற்பாடாக ஆய்வுத்துறையில் ஈடுபடும் பலருக்கு உகந்தது. கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் அண்மையில் (யூலை 15,16,17,18) திகதிகளில் இடம்பெற்ற சர்வதேச ஆய்வு மாநாட்டிற்கு நிறுவகப் பணிப்பாளர் கலாநிதி.சி.ஜெயசங்கர் அவர்களின் அழைப்பின் பெயரில் பேராசிரியர் வருகை தந்தார். பொன்னர் சங்கர் கூத்துப் பற்றி ஐம்பத்து நான்கு வருடம் தொடர் செயற்பாடாக ஆய்வு செய்து வரும் இவர் ஆய்வு மாநாட்டில் சமர்பித்த ஆய்வு உரை மிக முக்கியமானது. அதனைத் தொடர்ந்து மலையகத்தில் இரு நாட்கள் இடம்பெற்ற சந்திப்பும், கலந்துரையாடலும் அதில் கலந்து கொண்ட வகையில் பகிரப்படவேண்டியது.
கலாநிதி.சி.ஜெயசங்கர் அவர்களின் தலைமையில் மலையகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் லஷ;மன் அவர்களின் ஒருங்கிணைப்பில் இச் சந்திப்பானது ஏற்பாடு செய்யப்பட்டது. இவை மலையக கலைஞர்கள், எழுத்தாளர்கள், தொடர் செயற்பாட்டாளர்கள், மாணவர்கள் பொது மக்கள் என பலருடன் மேற்கொள்ளப்பட்டன. பேராசிரியர் பிருந்தா பெக் அவர்கள் இந்திய நாட்டினை அடிப்படையாகக் கொண்டு பொன்னர் சங்கர் கூத்தினை ஆய்வு செய்ததுடன் அதன் ஆய்வு எல்லையினை பல நாடுகளுடன் தொடர்புபடுத்தி பார்த்தார். இலங்கையில் இக் கூத்தானது மலையக பிரதேசங்களில் காணப்படுகின்றது. இது சடங்கோடு இணைந்த ஒரு கலைவடிவம். எனவே இதில் ஈடுபடும் மலையக கலைஞர்களுடன் அவர்களது அனுபவத்தினைப் பகிரக்கூடியதாக இச்சந்திப்பு அமைந்தது.
ஆய்வு ஒன்றினை எவ்வாறு செய்வது என்பது தொடர்பாக பல விடயங்களைக் கற்றுக் கொள்ளக் கூடியதாக பேராசிரியர்; அவர்களின் ஐம்பத்துநான்கு வருட ஆய்வுப் பயணம் விளங்குகின்றது. ஆய்வு என்பதனை பல தளங்களில் பார்க்கமுடியம் என்பதற்கான அறிவை விலாசப்படுத்தவும் தேடவும் எமக்கு தூண்டுகின்றது. குறிப்பாக பொன்னர் சங்கர் ஆய்விலே அதனை தமிழ் மற்றும் ஆங்கிலத்திலே புத்தகமாக வெளியிட்டுள்ளமை, 38 மணித்தியாலங்கள் இக் கதையினை இறுவெட்டாக ஆக்கியுள்ளமை (animation), சித்திரக்கதையாக உருவாக்கியுள்ளமை, கதையினைப் ஓவியங்கள் (painting) மூலம் வெளிப்படுத்தி உள்ளமை, அகழ்வாராய்ச்சி மூலம் தொடர்புபடுத்தியுள்ளமை, தனது இல்லத்தில் கதை பற்றிய விடயங்களை நூதன சாலையாக உருவாக்கியுள்ளமை, மென்பொருள் (software) வடிவத்திற்கு உருவாக்கி அது பற்றிய அனைத்து விடயங்களையும் அதற்கு உள்வாங்கியுள்ளமை என பலவற்றை இவ் ஆய்வின் மூலம் கொண்டு வந்திருக்கின்றார். இது இவர் ஆய்வில் கொண்டுள்ள தேடலும் ஈடுபாடும்.
பொன்னர் சங்கர் மூன்று தலைமுறையின் கதை இத்தலைமுறையினர் படிப்படியாக சிதைந்து போகின்றமையினை இக் கதை கூறிநிற்கின்றது. உறவுமுறை, ஐதிகம், சாதுரியமான தலைமைத்துவம், மனிதர்களின் குணபாவம், உலக இயல்பு என பலதைக் கூறி நிற்பதோடு சமகால சமூகப் பிரச்சினைகளை விளங்கிக் கொள்ள இது உதவுகின்றது. உலகத்தில் எழுந்த காவியங்களுக்கு சமதையாக பார்க்கக் கூடிய கதை ஆனால் ஏன் இவை அவ்வாறு பார்க்கப்படவில்லை. இதில் உள்ள அரசியல் என்ன என்பது பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது. பூர்விகமாக இருந்த குடியினரை துரத்தி விட்டு உயர்வர்க்கத்தினர் கூடியேறுதல் இக் கதையின் பிரதான நோக்கமாகும். ஆதிக்கம், அதிகாரம், பெண்ணியப் பார்வை போன்ற பல விடயங்கள் சம கால சூழுநிலையில் பார்க்கப்படவும் விவாதிக்கப்படவும் வேண்டிய விடயங்களும் பொன்னர் சங்கர் கதையில் உள்ளன. சமூகவியல், அரசியல், பண்பாடு, பொருளாதாரம், வரலாறு, கலை படிப்பவர்கள் பொன்னர் சங்கர் கதை பற்றி அறிதல் என்பது அவசியம்.
நவீன கல்விச் சூழல் மாணவர்களை புத்தகங்களுக்குள்ளும், அடைக்கப்பட்ட அறைகளுக்குள்ளும் உள்வாங்கி ஆளுமையற்ற மனிதர்களாய் உருவாக்கியுள்ளன. இதே வேளையில் ஆளுமை மற்றும் சிந்திப்பதற்கான செயற்பாட்டுத் தளங்களை திட்டமிட்டு இல்லாது செய்து கொண்டும் உள்ளது. இது பொதுவாக தற்கால சமூகம் எதிர்கொள்ளும் பாரிய சவாலாகும். அந்த வகையில் பொன்னர் சங்கர் கதை தொடர்பான ஆய்வு உரையும் கலந்துரையாடலும் ஹற்றன் ஸ்ரீபாதற் கல்வியற் கல்லூரியில் சந்திப்பின் முதற்கட்டமாக அமைந்தது. ஆரம்பத்தில் இது தொடர்பாக மாணவர்கள் வெளிப்படையாக பேசாது இருந்தமையும் கலந்துரையாடல் இறுதில் சில மாணவர்கள் இதுபற்றி தாங்கள் அறிந்ததாகவும் தமக்கான கதையாகவும் பொன்னர் சங்கர் கூத்தினை தாங்கள் செய்ய விரும்புதாகவும் கூறினர். இவை மலையக சூழலில் வாழும் மாணவர்களுக்கு பொன்னர் சங்கர் கதைப் பற்றி தெரியாது போனது அல்லது அது சம்பந்தமாக கதைக்க தவறியது ஏன் என்பது பற்றியும் ஆராய்வதும் விவாதிப்பதும் அவசியமானது.
உள்ளூர் சடங்குகள், விழாக்கள், பண்பாடுகள், கலை கலாசாரம் போன்ற வாழ்வியலோடு இணைந்த நிகழ்வுகளை மக்கள் கொண்டாடுவதன் ஊடாக தங்களையும், சமூகத்தையும் தாங்களே முகாமைத்துவம் செய்து கொள்ள கற்றுக்கொள்கின்றனர். உற்பத்தி திறன், நல்லிணக்கம், பொருளாதார விருத்தி என தற்கால உலகு வேண்டி நிற்கும் வேளை அவை அனைத்தும் உள்ளூர் அறிவுத்திறன் வாழ்வியலில் பிணைந்துள்ளது. குமரித்தோட்ட மக்கள் பொன்னர் சங்கர் கூத்தினை ஒவ்வொரு ஆண்டும் மிக நேர்த்தியாக செய்து வருகின்றனர். அடுத்து எமது பயணம் அதனை நோக்கியது. அங்கு பொன்னர் சங்கர் கூத்து ஆற்றுகை செய்யும் இடத்திற்கு சென்ற போது சுற்றியுள்ள கலைஞர்கள் மக்கள் ஒன்று கூடி மிகவும் உற்சாகமாக இவ்வாண்டு கூத்து நடாத்தியமையினை ஒவ்வொருவரும் எடுத்துரைத்தனர். இளைஞர்கள் தங்கள் தொலைபேசியில் எடுக்கப்பட்ட கானொளியை காட்டினர். தங்களுக்கு பிறவுன்ஸ்விக் கலைஞர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு பொன்னர் சங்கர் கதையினை ‘படிச்சி’ கொடுத்தாக தெரிவித்தனர். (படிச்சிக் கொடுத்தல் என்பது பழக்குதல்) அங்கு கூத்தினை பழக்கும் கலைஞருடன் உரையாடல் தொடர்ந்தது. அவர் பலவற்றைக் கூறினார்.
அதே இடத்தில் இன்னுமொரு கலைஞரை சந்திக்க கூடியதாய் அமைந்தது. அது பொன்னர்சங்கர் கூத்திற்கு உடை ஒப்பனை செய்யும் கனகராஜ் என்பவர். அவர் தனது இல்லத்திற்கு கூட்டிச் சென்று தான் செய்த பல கூத்திற்கான புகைப்படங்களை பார்ப்பதற்கு தந்தார். அவை பிரமிக்க வைத்தது. அழகாகவும், நுணுக்கமாகவும் அவரது உடை, ஒப்பனை செய்யும் ஆற்றல் காணக்கூடியதாங் அமைந்தன. தான் பல கிராமங்களுக்கு சென்று உடை ஒப்பனை செய்து வருவதாக கூறினார்.
குமரித்தோட்டம் மகாமுனி கோயில் இக்கிராமத்தில் மிக முக்கியமானது. இக்கலைஞர்களுடன் குறிப்பிட்ட தூரம் வாகனத்தில் சென்று பின் பாதை இடம் கொடுக்காததினால் நடை பயணமாக மகாமுனி கோயிலை தொடர்ந்தது. மக்கள் குடியிருப்பு இல்லாத ஒரு மலையில் இக் கோயில் அமைந்துள்ளது. சமஸ்கிரத மயமாக்கம் மக்களின் வாழ்வியலோடு இணைந்த சடங்குகளையும், பண்பாடுகளையும் திட்டமிட்டு இல்லாது செய்து அதன் ஆதிக்கம் உயர்ந்து செல்லும் இக்கால சூழலில் மகாமுனி கோயில் விதிவிலக்கு ஒவ்வொரு ஆண்டுக்கு ஒருமுறை இக் கோயிலில் ஆடு பலிகொடுத்து சடங்கு இடம் பெறும். இது கிராமிய ஆகம முறைசாரா ஆலயமாகும். இங்கு அமைக்கப்பட்டுள்ள சிற்பம், கடவுளர்களின் ஓவியம், கோயில் அமைப்புமுறை என்பன கிராமிய வழிபாட்டுடன் தொடர்பு பட்டதாக காணப்பட்டது. உள்ளூர் கலைஞர்கள் இதனை ஆக்கியிருக்கின்றனர். இவ் ஓவியத்தை வரைந்த ஓவியரை சந்திப்பதற்கு முயற்சித்த போதும் முயற்சி பயனளிக்கவில்லை.
மகாமுனி கோயில் மாசிமாதம் இதற்கான சடங்கு இடம்பெறும். அத்தோடு பொன்னர் சங்கர் கூத்து ஆரம்பிப்பதற்கான வழிபாடும் இங்கே இடம்பெறும். பின் ஈடுபடுவோர் ஆற்றுகை செய்யும் இடத்திற்கு செல்வர். மேலும் இக்கோயிலில் நேர்த்தி செய்யும் மக்கள் நே;த்தி கடனாக தங்களுக்கு விரும்பிய நாட்களில் வந்து பொங்கல் செய்து வழிபடுவதாக கூறப்படுகின்றது.
பாரம்பரிய கலைகள் மருவிவிட்டன. அவை இல்லாது போய்விட்டன என்ற கருத்தியல் பலரிடம் உள்ள நாவோதும் மந்திரம் ஆனால் அவற்றை முற்று முழுதாக அறிந்து கொள்ளாமல் எழுகின்ற ஒரு அறிவுத் தேடலாகும். அத்தோடு இது காலணித்துவ கல்வி முறையின் தாக்கமும்; கூட இதற்கு எடுத்துக்காட்டாக பொன்னர் சங்கர் கூத்து அழிந்து விட்டது. அவை இல்லாது மருவிவிட்டன என்ற கருத்து ஆரம்பத்திலையே இருந்தது. ஆனால் பிறவுன்ஸ்விக் என்ற இடத்திற்கு சென்று அங்குள்ள கலைஞர்களை சந்திக்கும் போது அதன் உண்மை நிலை அறியக் கூடியதாய் இருந்தது. பொன்னர் சங்கர் எவ்வாறு வலுவாக அச்சமூக மக்கள் மத்தியில் வாழ்வியலோடு இணைந்ததாக இருக்கின்றது என்பதும், ஒரு மாதத்திற்கு முன்பும் அச்சமூக மக்களிடையே பெரும் விழாவாக ஆற்றுகை செய்யப்பட்டு இருக்கின்றது என்பதும் தெரிய வந்தது. இங்கு இக் கூத்தினை பழக்கிய மருதமுத்து – கந்தையா, பால்ராஜி போன்றோர் முக்கியமானவர்கள். அவர்களுடன் ஏற்பட்ட கலந்துரையாடல் மிக முக்கியமானது.
அவர்களது ஆளுமையும் அறிவும், அனுபவமும் பிரமிக்க வைத்தது. எந்த இடத்திற்கு சென்றாலும் அச்சபையில் தளராமல் சரளமாக பேசும் அறிவாற்றல் அவர்களிடம் காணக்கூடியதாய் அமைந்தது. கல்விப்புலத்தில் இருக்கின்ற பலர் தங்களது ஆய்வுக்கான விடயப் பொருளாக கலைஞர்களையும், கலைகள் வாழும் இடங்களையும், மக்களையும் கொள்கின்றனர். இவ்வாறு செய்து விட்டு தாங்கள் அத்துறையில் உய்கின்றனர். ஆனால் அதற்கு அடிப்படையாக இருந்த கலைஞர்கள் வெளித் தெரிவதும் இல்லை முக்கியத்துவம் உணர்த்தப்படுவதும் இல்லை. இவை இன்றைய ஆய்வுச் சூழல் கொண்டுள்ள பெரும் அபத்தமும் கூட இவ்வாறு பல ஆளுமைகள் வெளிக்கொணரப்படாமல் வாழ்ந்து கொண்டுதான் உள்ளார்கள். அந்த வகையில் இக்கலைஞர்கள் இதற்கு எடுத்துக்காட்டு.
மருதமுத்து–கந்தையா அவர்கள், பொன்னர் சங்கர் கூத்தினை 54 வருடங்கள் ஆய்வு செய்த பிருந்தாபெக் போன்று மிக ஆழகாகவும், நுணுக்கமாகவும் அது பற்றி தெரிந்தவராக அவருடைய அனுபவம் காணப்பட்டது. இந்தியாவில் இது எவ்வாறு காணப்படுகின்றது இலங்கைக்கு எப்போது வருகை தந்தது என்று தெளிவாக பேசினார். பேராசிரியர் பிருந்தா பெக் கந்தையா அவர்களை இந்தியாவில் இக்கலையில் பாண்டித்தியம் பெற்ற கலைஞர்களுடன் பேசிய போது அவர்கள் கூறியது போன்று பொருத்தப்பாடாக உள்ளதாக தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து மஸ்கெலியாவில் இடம்பெற்ற மாலை சந்திப்பு மிகமுக்கியமானது. இதில் (பரமேஸ்வரன், மேகநாதன் , தனவந்த், கிருஸ்னகுமார், தவச்செல்வன், செந்தில்வேல், தாமரை, ஜோகா, லக்ஷ;மன்) போன்றோர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் எழுத்தாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் இங்கு ஏற்பட்ட உரையாடல் தொடர் செயற்பாடுகளுக்கு வழி வகுப்பதற்கு அமைந்தன. மலையக தற்கால எழுத்துக்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டதுடன் தொடர்ச்சியாக எதிர்வரும் காலங்களில் பல்கலைக்களகத்தில் மலையக எழுத்தாளர்களி;ன் புத்தகங்களை காட்சிப்படுத்துவதும், கலந்துரையாடுவதும் நூலகங்களுக்கு கொள்வனவு செய்வதும் சம்மந்தமாக கூத்துரையாடல்கள் நடை பெற்றமையும் குறிப்பிடத்தக்கவை. இதனூடாக பல்கலைக்கழக மாணவர்கள் மலையகம் சார்ந்த எழுத்துக்களை அறிவதற்கும், அவற்றை ஆய்வுக்குட்படுத்துவதற்கான தளத்தை உருவாக்கியதுடன். கற்றல் கற்பித்தலில் பொன்னர் சங்கர் கதையினை மாணவர்களுக்கு சிறந்த முறையில் முன்னெடுத்து செல்வதற்கும் இச்சந்திப்பு முக்கியமாக அமைந்தது.
இவ்வாறு ஆய்வுத்துறையில் பாண்டித்தியம் கொண்ட பேராசிரியர் பிருந்தா பெக் அவர்களின் அனுபவங்களையும், மலையக கலைஞர்களின் அனுபவங்களையும் கலந்து கொண்டோர் பெற்றுக்கொண்டதுடன். தொடர் செயற்பாடுகளுக்கு பாரிய பங்கினை இக்கலந்துரையாடலும், களப்பயணமும் ஆக்கியுள்ளது.
இ.குகநாதன்
சு.வி.அ.க.நிறுவகம்
கிழக்குப் பல்கலைக்கழகம்