தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009ஆம் ஆண்டில் கொல்லப்பட்டபோது தாமும் தமது சகோதரி பிரியங்கா காந்தியும் மகிழ்ச்சியடையவில்லை எனவும் வேதனையே அடைந்ததாகவும் இந்தியாவின் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் ஜெர்மனியில் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி இவ்வாறு தெரிவிப்பது இரண்டாவது சந்தர்ப்பம் ஆகும். கடந்த 2017ஆம் ஆண்டு குஜராத் தேர்தலின்போதும் அவர் இக் கருத்தை கூறியிருந்தார்.
ஜெர்மனிக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி அந்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகின்ற நிலையில் ஹம்பேர்க் நகரில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் கொல்லப்பட்டபோது எவ்வகையான உணர்வு நிலையை அடைந்தீர்கள் என எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ராகுல்காந்தி,தான் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவன் எனவும், தனது தந்தை ராஜீவ் காந்தியும் பாட்டி இந்திரா காந்தியும் வன்முறைக்கும் தீவிரவாத்திற்கும் பலியானவர் எனவும் இதனால் வன்முறையால் பாதிக்கப்பட்ட ஒருவன் என்ற வகையில் தனது பேச்சு அமைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடம் இடம்பெற்ற குஜராத் தேர்தல் பிரசாரம் ஒன்றில் கலந்து கொண்டபோதும் இந்த விடயம் குறித்து ராகுல் காந்தி தனது கருத்துக்களை கூறியிருந்தார். பிரபாகரனையும், அவரின் மகனையும் கொலை செய்த சம்பவம் குற்ற உணர்வை ஏற்படுத்துவதாகவும், அது வருத்தத்துக்குரியது எனவும் தெரிவித்திருந்தார். தனது தந்தை ராஜீவ் காந்தி தமிழீழ விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட போதும் பிரபாகரன் கொல்லப்பட்ட உடலைப் பார்த்தபோது, ஏன் இவ்வாறு நடந்தது என்று நினைத்து மிகுந்த கவலையையும், குற்ற உணர்வையும் உணர்ந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
1991இல் தனது தந்தை கொல்லப்பட்டதாக கூறிய அவர் தனது தந்தையை கொலை செய்தவர் இலங்கையில் ஒரு வயல் அருகில் கொல்லப்பட்டு கிடந்தது தனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை எனவும் தனது சகோதரி பிரியங்காவுக்கு அழைத்து தனது பதற்றத்தை தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
பிரபாகரனின் பிள்ளைகளுடன் தனது மனநிலையை இணைத்துக் கொள்வதாகவும் பிரபாகரன் மற்றும் அவரின் மகன் உடல்களைப் பார்த்து பிரியங்கா காந்தியும், தன்னிடம் கவலை தெரிவித்ததாகவும் அவர் கூறியிருந்தார்.