குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
கையடக்க தொலைபேசிக்கான சிம் அட்டைகளை விற்பனை செய்யும் இருவர், இளம் பெண்களுடன் தொந்தரவு செய்ததால், அவர்களை பெண் குரலில் கதைத்து அழைத்த இளைஞர்கள் சிலர் அவர்களை நையப்புடைத்து அனுப்பிவைத்ததுடன், அவர்கள் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிளையும் தீயிட்டு எரித்துள்ளனர் என யாழ்.காவல் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு கொக்குவிலில் இடம்பெற்றது என்று காவற்துறையினர் தெரிவித்தனர்.
அது குறித்து மேலும் தெரியவருவதாது , “யாழ்ப்பாணம், கலட்டிச் சந்தியில் சிம் அட்டைகள் விற்பனை செய்து கொண்டிருந்தோம். அங்கு வந்த வாள்வெட்டுக் குழு ஒன்று எம்மை வாள் முனையில் கடத்திச் சென்றது. கொக்குவில் கிழக்குப் பகுதிக்குக் கொண்டு சென்ற அந்தக் கும்பல் எம்மை வாள்களால் வெட்டிவிட்டு, எமது மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்து எரித்தது” என கைபேசி இணைப்பு சிம் அட்டை விற்பனை செய்யும் இளைஞர்கள் இருவரும் காவற்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அத்துடன் தாம் இருவரும் மானிப்பாய் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும், குறித்த சம்பவம் இரவு ஏழு மணியளவில் நடைபெற்றதாகவும் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட காவற்துறையினர், குறித்த இரு இளைஞர்களும் இளம் பெண்களுக்கு விற்பனை செய்ய சிம் அட்டைகளுக்கு அழைப்பு எடுத்து தொந்தரவு வழங்குபவர்கள் எனவும், பெண் பிள்ளைகளுடன் தவறாக நடக்க முற்பட்ட காரணத்தால்தான், இளைஞர்கள் சிலர் அவர்கள் இருவரையும் கொக்குவில் கிழக்குப் பகுதிக்கு அழைத்து தாக்கியுள்ளனர். எனவும், அவர்களுக்கு அழைப்பை எடுத்து பெண் குரலில் கதைத்துதான் கொக்குவில் கிழக்குக்கு அழைத்து இரு இளைஞர்களையும் தாக்கிய பின்னர் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளுக்கும் தீவைக்கப்பட்டுள்ளது. என விசாரணைகளில் கண்டறித்துள்ளனர்.
அத்துடன் தம்மை வெட்டினார்கள் என இளைஞர்கள் இருவரும் முறைப்பாட்டில் தெரிவித்துள்ள போதும், அவர்களுக்கு அடி காயங்களே உள்ளன. என காவற்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தொடர்ந்து தாம் முன்னெடுத்து வருவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை யாழ்ப்பாணம் நகர் பகுதியில் பூட்டுத் திருத்தும் கடையை நடத்துபவர் ஒருவரும் பெண்களுடன் சேட்டை விடுவதாகத் தெரிவித்து அண்மையில் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டார். அவரை பெண் ஒருவரை இரவு வேளை வீட்டு அனுப்பியே வெளியில் அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலுக்கு அமைப்பு ஒன்று பின்னர் உரிமை கோரியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.