நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடாத்துவது சாத்தியமே இல்லை என தலைமைத் தேர்தல் ஆணையாளர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார். உலகில் பல நாடுகளில் இரு தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவதனைப் போல் இந்தியாவிலும் நாடாளுமன்றத்துடன் சேர்த்து அனைத்து மாநில சட்டசபை தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்த மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகின்றது.
இதுதொடர்பில் தேர்தல் ஆணையகமும் அனைத்து கட்சிகளின் கூட்டத்தை கூட்டி கட்சிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்தது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பி.ராவத் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு 14 மாதங்கள் முன்பாகவே தேர்தல் ஆணையகம் அது தொடர்பான ஆரம்ப பணிகளில் ஈடுபட தொடங்கிவிடும்.
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த சட்ட ரீதியாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அந்த நடவடிக்கைகள் நிறைவடைய ஓராண்டு காலம் ஆகும். எனவே வருகிற நாடாளுமன்ற தேர்தலோடு அனைத்து மாநில சட்ட சபைகளுக்கும் சேர்த்து தேர்தல் நடாத்துவது சாத்தியமில்லை எனத் தெரிவித்துள்ளார்.