காணாமல் போ னோர் தர வரிசையில் உலக நாடுகளின் மத்தியில் இலங்கையே முதலிடத்தில் இருப்பதாக காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம், அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
காணாமல் போனோரை கண்டறியும் ஆனைக்குழு மூலமாக பெறப்பட்ட தகவல்களின் பிரகாரம் இருபதாயிரத்திற்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளமை தெரிய வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அதன்படி ஆசியாவில் மாத்திரமின்றி உலகளவிலேயே இலங்கை முதலிடத்தைப் பெற்றிருப்பதாகவும் இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை எதிர்வரும் 30ஆம் திகதி இடம்பெறவுள்ள காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளதாகவும் எதிர்வரும் காலத்தில் ஒருவரும் காணாமல் ஆக்கப்படக்கூடாது என்ற தொனிப் பொருளில் இந்த நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அன்றைய தினத்தில் மேற்குறிப்பிடப்பட்ட தொனியில் அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் காணாமல் போனோருக்கான நீதி மற்றும் நிவாரணத்தை வழங்க வலியுறுத்தியுள்ள அவ் அறிக்கையை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் சாலிய பீரிஸ் மேலும் தெரிவித்தார்.