குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
யாழ்.வடமராட்சி கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் அடாத்தாக தங்கியிருந்து கடலட்டை பிடிக்கும் வெளிமாவட்ட மீனவர்களை வெளியேற்றுமாறு கடற்றொழில் அமைச்சர் விஜிதமுனிசொய்ஷா உத்தரவிட்டிருந்தபோதும், குறித்த வெளிமாவட்ட மீனவர்களில் ஒருவர் கூட வெளியேற்றப்படவில்லை. அவர்கள் தொடர்ந்தும் தங்கியிருப்பதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கடந்த 21ம் திகதி யாழ்.மாவட்டத்திற்கு வருகைதந்த மத்திய கடற்றொழில் அமைச்சர் விஜிதமுனி சொய்ஷா யாழ்.நகரில் உள்ள விடுதி ஒன்றில் கடற்றொழிலாளர்களை சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.
இந்த கலந்துரையாடலின் பின்னர் வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சம்மேளன பிரதிநிதிகள் அமைச்சரை தனியே சந்தித்து வடமராட்சி கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் அடாத்தாக தங்கியிருக்கும் வெளிமாவட்ட மீனவர்களால் தாம் எதிர்கொள்ளும் பாதிப்புக்கள் குறித்து கூறியதுடன், அவர்களை அங்கிருந்து வெளியேற்றும்படி கேட்டிருந்தனர்.
இதனடிப்படையில் மேற்படி வெளிமாவட்ட மீனவர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றும்படி மத்திய கடற்றொழில் அமைச்சர் கடற்படை, கடற்றொழில் நீரியல்வளத்துறைத்திணைக்களம் மற்றும் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த உத்தரவு வழங்கப் பட்டு 3 நாட்கள் நிறைவடைந்த நிலையில் அடாத்தாக தங்கியுள்ள வெளிமாவட்ட மீனவர்களில் ஒருவர் கூட வெளியேற்றப்படவில்லை. என வடமராட்சி கிழக்கு மற்றும் வடக்கு பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இது குறித்து மேலும் அவர்கள் கூறுகையில், கடந்த 18ம் திகதி வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்பரப்பில் சட்டத்திற்கு மாறாக இரவில் ஒளிபாய்ச்சி கடலட் டை பிடித்துக் கொண்டிருந்த 81 வெளிமாவட்ட மீனவர்களையும், 28 படகுகளையும் கடற்படையினர் கைது செய்தனர்.
பின்னர் கடற்றொழில் திணைக்களத்தின் தலையீட்டினால் சட்டத் திற்கு மாறாக அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் வெளிமாவட்ட மீனவர்களை வெளியேற்றக்கோரி ஜனாதிபதி வருகையின்போது கறுப்பு கொடி போராட்டத்தை நடத்துவதற்கு மீனவர்கள் திட்டமிட்டமிட்டிருந்த நிலையில் 21ம் திகதி மத்திய கடற்றொழில் அமைச்சர் வெளிமாவட்ட மீனவர்களை உடனடியாக வெளியேற்றுமாறு உத்தரவிட்டார்.
அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 3 நாட்களாகும் நிலையில் எந்தவொரு மீனவரும் வெளியேற்றப்படவில்லை. என்பதுடன் அமைச்சரின் உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்கான சமிக்ஞை கூட வெளிக்கா ட்டப்படவில்லை. ஜனாதிபதிக்கு எதிரான மக்கள் போராட்டங்களை மழுங்கடிக்கும் நோக்கில் மத்திய கடற்றொழில் அமைச்சர் இந்த உத்தரவை வழங்கினாரா? என தமக்கு சந்தேக எழும்பியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.