டெல்லியின் நங்லாய் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து 25 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று தளங்கள் கொண்ட இந்த பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் பிளாஸ்டிக் தொழிற்சாலையின் ஒரு பகுதியில் தீப்பிடித்துள்ளதனால் பிளாஸ்டிக் பைகள் மற்றும் மூலப் பொருட்கள் பற்றி எரியத் தொடங்கியதாகவும் இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தீ விபத்து குறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து தீயணைப்பு வீரர்கள் 25 வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கும் அதேவேளை உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது