பாலஸ்தீனத்துக்கு வழங்குவதாக அமெரிக்கா அறிவித்திருந்த 200 மில்லியன் டொலருக்கும் மேற்பட்ட நிதியுதவி நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இஸ்ரேல் தலைநகராக ஜெரூசலத்தை அமெரிக்கா அங்கீகரித்ததை தொடர்ந்து வெள்ளை மாளிகையுடனான உறவை பாலஸ்தீனம் முறித்துக் கொணட்தனையடுத்து இருநாடுகளுக்கும் இடையே நிலவி வந்த நிலையில் முரண்பாடுகள் காரணமாக இவ்வாறு நிதியுதவி நிறுத்தப்படுவதாக அமெரிக்கா இன்று அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் பாலஸ்தீனத்தின் வெஸ்ட் பாங் மற்றும் காசா நகரங்களின் நிர்வாகம், சுகாதாரம், கல்வி போன்றவற்றை மேம்படுத்த 251 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்து. எனினும் அப்பகுதிகளில் ஹமாஸ் தீவிரவாதிகளின் தாக்கம் அதிகம் இருப்பதால் பாலஸ்தீனத்துக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட குறித்த நிதி நிறுத்தப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
பாலத்தீனத்திற்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட நிதி வேறு திட்டங்களுக்காக பயன்படுத்தப்படும் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வழிகாட்டலின்படி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த முடிவை அரசியல் ரீதியிலான அச்சுறுத்தல் என குறிப்பிட்டுள்ள பாலஸ்தீனம், இது போன்ற நடவடிக்கைகளால் பாலஸ்தீன மக்களையும், அரசையும் மிரட்டமுடியாது எனத் தெரிவித்துள்ளது.