பிளாஸ்டிக் விழிப்புணர்வுக்கு நடிகர்கள் விவேக், சூர்யா, கார்த்தி, நடிகை ஜோதிகா ஆகியோரை பிரசார தூதர்களாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்துள்ளார்.
சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக தமிழக அரசு எதிர்வரும் 2019 ஜனவரி முதலாம் திகதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றை கண்காணிக்கும் வகையிலும், இது தொடர்பாக அரசுத் துறைகளால் எடுக்கப்படும் நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்கும், சிரேஸ்ட ஐ.ஏ.எஸ். ஊத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட, ‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு’ இலச்சினை, மற்றும் வலைதளத்தை ஆரம்பித்து வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிளாஸ்டிக் பயன்பாடுகளை தவிர்ப்பது மற்றும் மறுசுழற்சி செய்வது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்திடும் வகையில் தயாரிக்கப்பட்ட குறும்படங்களையும் வெளியிட்டார்.
திரைப்பட பிரபலங்கள் மூலமாக மக்களிடையே பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகளை தவிர்ப்பது குறித்தும், பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பைகள், சணல் பைகள், காகித பைகள் போன்றவற்றை உபயோகிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, தமிழ்நாடு அரசின் சார்பில் ‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு’ விளம்பரத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள நடிகர் விவேக்கை முதலமைச்சர் அறிமுகம் செய்து வைத்தார்.
அத்துடன் பிளாஸ்டிக்கை முழுமையாக தடை செய்வதற்கு விளம்பரத் தூதுவர்களாக நடிகர்கள் விவேக், சூர்யா, கார்த்திக், நடிகை ஜோதிகா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன் தொடாச்சியாக, மாவட்ட அளவில் ‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு’ பிரச்சாரம் இன்று 25-ம் திகதி மாவட்ட அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஆரம்பித்து வைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது