தமிழ் மக்களின் தேவைகளுக்காக அவர்களின் விருப்பத்துடனேயே வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஐனாதிபதியின் செயலணிக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் அமைப்பு தெரிவித்துள்ளது.
இக் கூட்டத்தில் கூட்டமைப்பு கலந்து கொள்வதால் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்விலோ அல்லது இதர விடயங்களிலோ எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ள புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் வடக்கு முதலமைச்சரை எதிர்ப்பதற்காக இத்தகையதொரு முடிவை கூட்டமைப்பு எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான ஐனாதிபதியின் செயலணிக் கூட்டத்தில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளாது அந்தக் கூட்டத்தைப் புறக்கணிக்க வேண்டுமென வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரன் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்மந்தனிடம் கடந்த 22 ஆம் திகதி கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் அன்றையதினம் இடம்பெற்ற கூட்டமைப்பின் நாடாளுமன்றக் கூட்டத்தில் கட்சித் தலைவரால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டிருந்தது. ஆனாலும் ஐனாதிபதி செயலணியில் கலந்து கொள்ள வேண்டுமென பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்ததற்கமைய செயலணியில் கலந்து கொள்வதென நாடாளுமன்றக் குழு தீர்மானித்திருந்தது.
கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் மேற்படி முடிவை கடுமையாக விமர்சித்து அறிக்கையொன்றை வெளியிட்டிருந்த வடக்கு மாகாண முதலமைச்சர் பணத்தையும் செல்வாக்கையும் எதிர்பார்த்தே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார். அத்தோடு இச் செயலணியில் கலந்து கொள்வதால் ஏற்படும் பாதக நிலைமைகள் தொடர்பிலும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.
மேலும் இது முதலமைச்சரை எதிர்ப்பதாக நினைத்துக் கொண்டு அரசாங்கத்திற்கு ஆதரவாகச் செற்படும் முடிவென்றும் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈ.பீ.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் விமர்சித்திருந்தார்.
இவ்வாறானதொரு நிலையிலையே கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சித்தார்த்தனிடம் இது குறித்து வினவிய போது அவர் பல விடயங்களைத் தெரிவித்திருந்தார்.
மேலும் தெரிவித்துள்ளதாவது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் கடந்த சில தினங்களிற்கு முன்னர் நடைபெற்றிருந்தது. அதன் போது ஐனாதிபதி செயலணிக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளக் கூடாதென வடக்கு முதலமைச்சர் தெரிவித்துள்ள விடயம் குறித்து பேசப்பட்டது. அதன் போது எமது மக்களுக்காக அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென்று ஒரு முடிவு எடுக்கப்பட்டிருக்கின்றது.
ஆந்த முடிவானது கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான ரொலோ ,புளொட், மற்றும் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்தே எடுத்திருந்தது. அதில் நான் கலந்து கொள்ளாது விடினும் எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டிருந்தார்.
இப்படியே தீர்வு வரும் தீர்வு வருமென்று கடந்த பல வருடமாக இழுபட்டுக் கொண்டிருக்கின்றோம். அதற்காக இனியும் அபிவிருத்தி வேலைகளில் நாங்கள் பங்கெடுப்பதை தவிர்த்துக் கொண்டிருக்காமால் அபிவிருத்தியையும் செய்து கொண்டு அரசியல் தீர்வையும் நோக்கிப் பயணிப்போம் என்று கூறியே அத்தகையதொரு முடிவெடுக்கப்பட்டிருக்கின்றது. அதை நானும் ஏற்றுக் கொள்கிறேன்.
ஏனெனில் இக் கூட்டத்திற்குப் போகாமல் விடுவதால் உடனடியாக அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வந்து தீர்வைக் காணப் போவதில்லை. ஆகையினால் அதற்குப் போவதால் இயலுமான வேலைகளைச் செய்து கொண்டு பயணிக்கலாம் என்று நினைக்க முடியும். இவ்வாறே தொடர்ந்தும் தீர்வு வரும் வரும் என்று இருந்தால் எமது மக்கள் தான் பாவம். ஆகையினால் அவர்களுக்காக அபிவிருத்தியை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டியிருக்கின்றது.
மேலும் பணம் செல்வாக்கை எதிர்பார்த்து இத்தகையதொரு முடிவு எடுக்கப்படவில்லை. அபிவிருத்தி நோக்கம் கருதி மக்களுக்காகவே தான் அந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கின்றது. ஏனெனில் நாங்கள் போவதென ஏற்கனவே ஒரு நிலைப்பாடு இருந்தது.
மேலும் முதலமைச்சர் போக வேண்டாம் என்று கூறியதனால் தான் நாங்கள் போகிறதாகவும் அல்ல. அத்தோடு இந்த முடிவானது முதலமைச்சரைத் தோற்கடிக்க வேண்டுமென்பதற்காக எடுக்கப்பட்டதாக நான் கருதவில்லை.
ஆனால் தமிழரசுக் கட்சியினர் என்ன நோக்கத்திற்காக அப்படியொரு முடிவை எடுத்தார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் எங்களைப் பொறுத்தவரையில் முதலமைச்சருடைய கருத்தை எதிர்க்க வேண்டும் அல்லது அவரைத் தோற்கடிப்பதற்காக அந்த முடிவு எடுக்கப்படவில்லை என்று கூறுகின்றோம்.
குறிப்பாக அவிருத்தியை முன்னெடுக்கின்ற அதே நேரத்தில் அரசியல் தீர்வையும் நாங்கள் வலிறுத்துவோம். இவ்வாறு இந்த இரண்டும் சமாந்தரமாக கொண்டு செல்லப்பட வேண்டுமென்பதே எங்களுடைய நிலைப்பாடு ஆகும். என மேலும் தெரிவித்தார்.
1 comment
ஐ.நா. மனித உரிமைச் சபையின் தீர்மானங்களுக்கு அமைய குற்றவியல் விசாரணைக்கு தயார் செய்தல், உண்மையைத் தேடுதல், பொறுப்புக் கூறுதல், நீதி வழங்குதல், அரசியல் தீர்வை எடுத்தல், இழப்பீடுகளைக் கொடுத்தல், கொடூர குற்றங்களை மீண்டும் செய்யாது இருத்தல், நல்லிணக்கத்தை உருவாக்குதல், மனித உரிமைகளை செயல்படுத்தல், அபிவிருத்தி செய்தல் மற்றும் அடிப்படை சுதந்திரத்தை அனுபவித்தல் தொடர்பான பணிகளை முடிந்த அளவு சமாந்தரமாகக் கொண்டு செல்ல வேண்டும். இதை தமிழ்த் தரப்பு தவற விட்டுள்ளது. இனியாவது தமிழர்கள் தீவிரமாக பங்கேற்க வேண்டும்.