குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
வவுனியா வடக்கு நெடுங்கேணி ஒலுமடு பகுதியில் உள்ள வெடுக்குநாறி மலை மீது அமைந்துள்ள ஆதி ஐயனார் ஆலயத்திற்கு இன்றைய தினம் ஞாயிற்றுகிழமை தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் சென்றிருந்தார்.
குறித்த ஆலயம் அமைந்துள்ள மலை மற்றும் அதனை சூழவுள்ள காட்டு பகுதி என்பன தொல்லியல் திணைகளத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசம் எனவும் அங்கு அனுமதியின்றி சென்றால் சட்ட நடாவடிக்கை எடுக்கப்படும் என கடந்த 10 ஆம் திகதி ஆலய நிர்வாகத்தினரை அழைத்து நெடுங்கேணி காவற்துறையினர் எச்சரித்திருந்தனர்.
அந்நிலையில் குறித்த எச்சரிக்கை தொடர்பில் கடுமையான எதிர்ப்புக்கள் கிளம்பிய நிலையில் பின்னர் 12ஆம் திகதி மீள ஆலய நிர்வாகத்தினரை அழைத்த நெடுங்கேணி காவற்துறையினர் ஆலயத்தில் ஏதேனும் மாற்றங்கள் , கட்டடங்கள் அமைத்தல் போன்ற ஏதேனும் செயற்பாடுகளை செய்வதாயின் அதற்கு தொல்லியல் திணைக்களத்தின் அனுமதி பெறப்பட வேண்டும். ஆலயத்திற்கு சென்று வருவதற்கோ , பூஜை வழிபாடுகளை மேற்கொள்ளவோ எந்த தடையும் இல்லை என தெரிவித்திருந்தனர்.
அதனை அடுத்து , தற்போது பொதுமக்கள் ஆலயத்திற்கு சென்று வழிபாட்டினை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையிலையே குறித்த ஆலயத்திற்கு அமைச்சர் மனோகணேசன் சென்றுள்ளார்.