தனது சாதனையை ஜேம்ஸ் அன்டர்சன் முறியடித்து விட்டால் ,அவரது சாதனையை எவராலும் தொட முடியாது என அஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த க்ளென் மகராத்மக்ராத் தெரிவித்துள்ளார். மகராத் 124 டெஸ்ட் போட்டிகளில் 563 விக்கெட்டுக்களைப் பெற்று வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தியதில் முதல் இடத்தில் உள்ளார். இவர் கடந்த 2007-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெற்றார்.
தற்போது 36 வயதாகும் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அன்டர்சன் , மக்ராத்தின் சாதனையை முறியடிக்கவுள்ளார். இவர் 141 போட்டிகளில் 557 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். இன்னும் 7 விக்கெட்டுக்கள் வீழ்த்தினால் மக்ராத் சாதனையை முறியடிப்பார். இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு எதிராக இன்னும் இரண்டு போட்டிகளில் விளையாட உள்ளதனால் அப்போது இந்த சாதனையை படைக்க வாய்ப்பு இருக்கிறது.
இந்நிலையில் ஒருமுறை எனது சாதனையை அன்டர்சன் முறியடித்து விட்டால் அவரை எவராலும் தொட இயலாது என தெரிவித்துள்ள மக்ராத் தான் ஜேம்ஸ் அன்டர்சன் மீது அதிக அளவில் மரியாதை வைத்துள்ளேன் எனவும் அவருக்கு வாழ்த்துக்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
சாதனை என்பது அருமையானது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்ததற்காக பெருமைப்படுகிறேன். எனது சாதனையை ஜேம்ஸ் அன்டர்சன் முறியடிக்கும்போது அவருக்கு சமமான சந்தோசம் அடைவேன். ஏனென்றால் எந்தவொரு நாட்டில் இருந்து விளையாடினாலும் வேகப்பந்து வீச்சாளர் என்பது அவர்களை ஒருங்கிணைக்கும் என மக்ராத் தெரிவித்துள்ளார்