குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
File Photo
வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் அமைந்துள்ள நாச்சிமார் ஆலயத்தினை இராணுவத்தினரிடம் இருந்து பெற்று தாருமாறு ஆலய தர்மகர்த்தா சபையினர் மற்றும் ஆலய பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடந்த 15 வருட காலத்திற்கு மேலாக குறித்த ஆலய பகுதியில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர். அதனால் ஆலயத்திற்கு சென்று வழிபட முடியாத நிலை காணப்படுகின்றது. அத்துடன் ஆலய சூழலில் அமைந்துள்ள குறித்த இராணுவ முகாமில் மாமிசங்கள் சமைக்கபடுவதாகவும் , அங்குள்ள இராணுவத்தினர் மாமிசம் உண்ட பின்னர் ஆலய சூழலில் நடமாடுவதனாலும் ஆலயத்தின் புனித தன்மை கெட்டு போவதாகவும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது யாழ்.மாவட்ட இராணுவ கட்டளை தளபதியாக உள்ளவர் யாழில் உள்ள இந்து ஆலய புனரமைப்பு பணிகளுக்கு சீமெந்து மற்றும் மணல் என்பவற்றை தானமாக வழங்கி வருகின்றார்.
எனவே இந்து ஆலயங்களில் அக்கறை கொண்டவர் எனவும் , இறை வழிபாட்டில் நம்பிக்கை உள்ளவர் எனவும் நம்புகின்றோம். அதனால் இராணுவ தளபதி உடனடியாக செயற்பட்டு எமது கோயிலில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரை வேறு இடத்திற்கு மாற்றி எமது ஆலயத்தை எம்மிடம் மீள கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆலய தர்மகர்த்தா சபையினர் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.